சி ஐ டியில் இன்று ஆஜராகவும் மாளிகா கந்த நீதிமன்றம் உத்தரவு
சுற்றாடல் அமைச்சரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று (01) அமைச்சருக்கான இந்த வெளிநாட்டு பயணத்தடையை விதித்தது. அத்துடன் இன்றைய தினம் (02)அமைச்சர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை, முன்னாள் சுகாதார அமைச்சரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டி.யினரின் விசாரணைக்கு செல்லாமைக்கான காரணம் தொடர்பில் ஆராய்வதற்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு நேற்று முன்தினம் சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த அந்த நேரத்தில் அவர், வேறு நீதிமன்ற வழக்கு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாரா என்பது தொடர்பில் ஆராயுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை கடந்த (31) காலை 9 மணிக்கு குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தில் ஆஜராகுமாறு
அறிவிக்கப்பட்டிருந்தது.இந் நிலையில் அவர் வேறு ஒரு வழக்கு விடயமாக மேல் நீதிமன்றத்திற்கு அந்நேரத்தில் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உண்மை நிலையை ஆராயுமாறு அந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கு காரணமாக அவரால் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்துக்கு வரமுடியாமல் போனதா என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்