Wednesday, November 13, 2024
Home » இந்திய மீனவர்கள் 18 பேர் ஒத்திவைக்கப்பட்ட சிறையின் கீழ் விடுதலை

இந்திய மீனவர்கள் 18 பேர் ஒத்திவைக்கப்பட்ட சிறையின் கீழ் விடுதலை

- 3 குற்றச்சாட்டுகளுக்கு 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறை

by Rizwan Segu Mohideen
February 1, 2024 12:36 pm 0 comment

– 2 ட்ரோலர் படகுகளுடன் ஜனவரி 16 இல் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 இந்திய மீனவர்கள் நேற்றையதினம் (31) மன்னார் நீதி மன்றத்தினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினால் 3 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.

பணிப்பாளரின் அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டமை, இலங்கை கடற்பரப்பில் கடற் தொழிலில் ஈடுபட்ட மை, மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி தொழில் முன்னெடுத்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு உட்படுத்திய நீதவான் 1ஆம் மற்றும் 2ஆம் குற்றச்சாட்டுகளுக்கு 12 மாதங்களும், 3ஆவது குற்றச்சாட்டுக்கு 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டு இவர்களை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும் படகை விடுவிப்பது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவுள்ளது.

இதன் போது அன்றைய தினம் படகின் உரிமையாளர் மன்றில் முன்னிலையாகுமாறு மன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஊடாக மிரிஹான நிலையத்துக்கு அனுப்பப்பட்டு இந்தியாவுக்கு அனுப்ப நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டம் தாழ்வுப்பாடு கடல் பகுதியை அண்மித்த கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்து இரண்டு ட்ரோலர் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்றொழிலாளர்கள் 18 பேர் கடந்த 16ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைதான 18 கடற் தொழிலாளர்களும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு ட்ரோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டுவரப்பட்டன.

அதன்பின்னர் 18 கடற் தொழிலாளர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணைகளின் பின்னர் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் 17ஆம் திகதி புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்திய போது அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் குறூப் நிருபர்)

மன்னார் கடற்பரப்பிற்குள் நுழைந்த 18 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT