Saturday, July 20, 2024
Home » மாணவர்களின் வாழ்வில் முக்கியத்துவம் மிகுந்த வழிகாட்டல் ஆலோசனை சேவை

மாணவர்களின் வாழ்வில் முக்கியத்துவம் மிகுந்த வழிகாட்டல் ஆலோசனை சேவை

by mahesh
January 31, 2024 9:14 am 0 comment

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை என்பது மாணவர்களின் கற்றலுக்கும், சுயமேம்பாட்டுக்கும், எதிர்கால வாழ்வுக்கும் வழிகாட்டுவது ஆகும். பாடசாலை வாழ்வில் ஏற்படும் தடங்கல்களைக் களைவதற்கும், நன்மை தீமைகளை ஆராய்ந்து சுயதீர்மானத்துடன் தெரிவுகளை மேற்கொண்டு நாளாந்த வாழ்வு வாழ்வதற்றும் அது உதவும்.

பாடசாலை வாழ்க்கையின் எல்லாச் சந்தர்ப்பங்களிலும், எல்லா வளர்ச்சிப் பருவங்களிலும் சூழலுடன் பொருத்தப்பாடடைந்து இயைபாக்கம் காணவும், சுயதிறன்களை விருத்தி செய்யவும், பொருத்தமான தெரிவுகளை (பாடத்தெரிவு, தொழிற்தெரிவு), தீர்மானங்களை மேற்கொள்ளவும் உளவியல் அணுகுமுறை அடிப்படையில் பயிற்சி பெற்றவரால் வழங்கப்படும் உதவியே வழிகாட்டலாகும்.

இன்றைய நவீன உலகின் மாற்றமானது அனைத்தையும் மாற்றமடையச் செய்திருக்கின்றது.

தொழில்துறை, பொருளாதாரம், கல்வி, அபிவிருத்தி நடவடிக்கைகள் போன்ற அனைத்துத் துறைகளின் மாற்றமும் இன்றைய உலகின் நவீன மாற்றங்களாக மாறிக்கொண்டிருப்பதோடு இதில் எதிர்நீச்சல் போடத் தெரியாதவர்கள் தூரப்படுத்தப்படும் நிலையும் காணப்படுகின்றது.

இதனை மையமாகக் கொண்டுதான் ஐக்கிய நாடுகள் கல்வி, கலாசார, விஞ்ஞான ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலின்படி ‘சகல கல்வி நிலையங்களினதும் முக்கிய நோக்கம், மாற்றம் பெற்றுவரும் சூழலுக்கு ஏற்ற விதமாக மாணவர்களுக்கு தம்மை நெறிப்படுத்திக்கொள்ள வழிகாட்ட வேண்டும்’ என்ற விடயம் வலியுறுத்தப்படுகின்றது.

எனவேதான் இன்று கல்வி அமைச்சானது 300 மாணவர்கள் கல்வி கற்கும் ஒரு பாடசாலைக்கு தனியான வழிகாட்டல் ஆலோசனைப் பிரிவொன்றினை நிறுவியிருப்பதோடு, இதற்குப் பொருத்தமான ஆசிரியர்களை ஈடுபடுத்தி அவர்களுக்கான பயிற்சிகளை மாணவர்களின் கல்வி உளவியலிலும், வழிகாட்டல் ஆலோசனை விடயத்திலும் வழங்கி வருகின்றது.

இவ்வாறான நிலை தோன்றுவதற்கு பலவாறான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள் ஆகியோருக்கான போதியளவான தெளிவின்மையும் இதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

பாடசாலை வழிகாட்டல் சேவையில் ஒரு அதிபரின் வகிபங்குகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

செயற்பாடுகளை ஒன்றிணைத்து பல்வேறு அதிகாரிகளுக்கு இடையில் இணைப்பை ஏற்படுத்தல்,

உரிய வளங்களை தேடுவதும் வழங்குதலும், சேவை தொடர்பான தீர்மானங்களை எடுத்தல்,

செயற்பாடுகளை திட்டமிடுதலும் செயல்படுத்தலும், மாணவர் ஆசிரியர் பெற்றோர் மத்தியில் சாதகமான விழிப்புணர்வை ஏற்படுத்தல், சேவையில் ஒருங்கிணைப்பாளராக செயல்படுதல்.

இயந்திரமயமான இன்றைய சூழலில் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் திட்டம் அவசியமாக கருதப்படுகின்றது. பாடசாலைகளில் வழிகாட்டுதல் சேவையை மேற்கொள்வதற்காக ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பாடசாலையிலும் வழிகாட்டுதல் பணிகள் பயிற்சி பெற்ற நபர்களால் மாணவருக்கு வழங்கப்படுகின்றன. மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அவர்களின் மேம்பாட்டிற்கும் வழிகாட்டப்படுகின்றது.

பின்வரும் வழிகளில் மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் அவசியமாகின்றன.

கல்வி வழிகாட்டுதல், தொழில் வழிகாட்டுதல், தனிநபர் வழிகாட்டுதல், சமூக வழிகாட்டுதல், உளச்சுகாதாரத்திற்கான வழிகாட்டல்.

கலை, அறிவியல், தொழில்நுட்பப் பாடங்களில் எவற்றைத் தெரிவு செய்து படிக்க வேண்டும் என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படக் கூடும். ஒரு மாணவனின் நோக்கம், திறமை, செயற்பாடு, நாட்டம், மனப்போக்கு, நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் எந்தத் துறையை தேர்வு செய்வது என்பது பற்றி ஆலோசனை வழங்கி உதவுதல் கல்வி வழிகாட்டுதல் ஆகும்.

கல்வி கற்கும் இடங்களில் இணக்கத்துடனும் நட்புறவுடனும் நடப்பதற்கு வழிகாட்டல், வேலைவாய்ப்புப் பற்றிய மேலும் தகவல்களைப் பெற வழிகாட்டுதல், அறிவை வளர்க்கத் தேவையான நூல்களை நூலகத்தில் எடுத்துப் பயன்பெறுவதற்கு வழிகாட்டல், மாணவர்களின் தனித்திறன் மற்றும் ஆளுமைப்பண்பை வளர்த்தல், கல்வியினால் கிடைக்கும் முழுப்பயனையும் அடைய உதவுதல் ஆகியனவும் முக்கியமாகும்.

இவ்வாறான பாடசாலைகளில் அடைவு மட்டங்களாக பாடப்புள்ளிகள் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற பாடங்களினது புள்ளிகள் தாம் பிரதானமானவையாக நோக்கப்படுகின்றது. இந்த வழிகாட்டல் ஆலோசனைச் சேவையினை கல்வி அமைச்சானது வலியுறுத்தியிருந்த போதும் இவர்கள் உதாசீனம் செய்வதனை நாம் கவலையோடு தெரிவிக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

இன்று எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் இந்த வழிகாட்டல் ஆலோசனைச் சேவையானது விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிலையங்கள், மருத்துவ நிலையங்கள், தொழில் வழிகாட்டல் நிலையங்கள், குடும்ப அமைப்புக்கள் போன்ற அனைத்து விடயங்களிலும் இதன் அவசியப்பாடு உணரப்பட்டு அவை செயற்படுத்தப்படுவதனை நாம் காணலாம்.

இச்சேவையானது பிள்ளைகளின் உள்ளத்தோடு கையாளப்பட வேண்டிய விடயம் என்பதனால் இச்சேவையினை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் தம்மை முழுமையாக திறந்த உள்ளத்தோடு இதில் ஈடுபடுத்தி செயற்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

எனவே இந்த வழிகாட்டல் ஆலோசனைச் சேவையை எமது பாடசாலைகளில் சிறப்பாக நடைமுறைப்படுத்தி உடல், உள மேம்பாட்டிற்கு வழியமைக்க அதிபர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு வழங்குவது அவசியம்.

றிப்கா அன்ஸார் (அதிபர்) மழ்ஹருஸ் ஷம்ஸ் மகாவித்தியாலயம், சாய்ந்தமருது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT