மூன்று அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்ட ஜோர்தானில் இடம்பெற்ற ஆளில்ல விமானத் தாக்குதலில் ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் தொடர்புபட்டிருப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சுமத்தும் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.
“பிராந்தியத்தின் யதார்த்தத்தை மாற்றும் பிரத்தியேக அரசியல் இலக்குகளுடன் தொடர்புபட்டே இந்தக் கூற்றுகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் நாசர் கனானி அந்நாட்டின் உத்தியோபூர்வ இர்னா செய்தி நிறுவத்திற்கு தெரிவித்துள்ளார்.
எனினும் ஈராக்கில் இயங்கும் ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்களில் ஒன்றான இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் இயங்கும் கடும்போக்கு ஈரான் ஆதரவு குழுக்கள் இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளன என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் குறிப்பிட்டார்.
இது அடிப்படையற்றது என்று கனானி நேற்று தெரிவித்தார்.
சிரிய எல்லையில் ஜோர்தானில் உள்ள அமெரிக்க தளம் ஒன்றின் மீது நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 34 பேர் காயமடைந்தனர்.
சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல்கள் அதேபோன்று காசாவில் தொடரும் போர் பிராந்தியத்தின் ஸ்திரமற்ற நிலையை தீவிரப்படுத்தும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் எச்சரித்தார்.
எதிர்ப்புக் குழுக்கள் ஈரானிடம் இருந்து உத்தரவுகளை பெறுவதில்லை என்றும் கனானி குறிப்பிட்டார்.
காசா போரை ஒட்டி ஏற்கனவே மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம் அடைந்திருக்கும் சூழலிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.