தென்னாபிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறி இருக்கும் இலங்கை அணி தனது முதல் போட்டியில் இன்று மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளவுள்ளது.
கிம்பர்லியில் நடைபெறும் இன்றைய ஆட்டம் தொடரின் அரையிறுதிக்கு முன்னெறுவதற்கு தீர்க்கமானதாக அமையவுள்ளது.
இலங்கை இளையோர் அணி நேற்று முன்தினம் (28) நடைபெற்ற அவுஸ்திரேலிய இளையோர் அணிக்கு எதிரான சி குழுவுக்கான கடைசிப் போட்டியில் 6 விக்கெட்டுகளால் தோல்வி அடைந்தது சுப்பர் சிக்ஸ் சுற்றில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
குழு நிலையில் சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும் அணியுடனான வெற்றி மூலம் பெறும் புள்ளிகள் சுப்பர் சிக்ஸ் புள்ளிப் பட்டியலில் சேர்க்கப்படும். எனினும் இலங்கை அணி குழுநிலையில் சிம்பாப்வேயுக்கு எதிராக பெற்ற வெற்றியினால் 2 புள்ளிகளுடனேயே சுப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் சுப்பர் சிக்ஸ் சுற்றில் ஓர் அணி மற்ற அணியுடன் இரண்டு போட்டிகளில் ஆடும். இதில் இன்று மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ளும் இலங்கை இளையோர் அணி எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி போட்டியை நடத்தும் தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளும்.
12 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெறும் சுப்பர் சிக்ஸ் சுற்றுப் போட்டியில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே அரையிறுதிக்கு முன்னேறும்.
இதில் இலங்கை இளையோர் அணி சுப்பர் சிக்ஸ் சுற்றின் புள்ளிப் பட்டியலில் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது. என்றாலும் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவது தீர்க்கமானதாக அமையும்.