– சர்வதேச உதவியைக் கோர சர்வதேச நாடுகளுக்குச் செல்ல வேண்டியவர் செல்ல வேண்டும்
– கத்தோலிக்க மக்களின் ஒரு வாக்கும் ஜேவிபிக்கு போகக் கூடாது
பெருமளவிலான எம்.பி.க்களும், பெருமளவிலான கட்சிகளும் சேர்க்கப்பட்டு, எதிர்காலத்தில் மிகப் பெரிய கூட்டணி உருவாக்கப்படும் என, புதிய கூட்டணியின் ஸ்தாபகரான பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணியை கட்டியெழுப்பும் நோக்கில் நேற்று (27) ஜாஎல நகரில் நடைபெற்ற முதலாவது மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிமல் லான்சா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“உறுதியான பொருளாதாரம் – வெற்றிகரமான பயணம்” எனும் தொனிப்பொருளைக் கொண்ட புதிய கூட்டணியின் அங்குரார்ப்பண பொதுக்கூட்டம் நேற்று (27) ஜாஎல நகரில் பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இதன்போது, கூட்டணியின் செயற்பாட்டுத் தலைவர் அநுர பிரியதர்ஷன யாபா, புதிய கூட்டணியின் ஸ்தாபகர் நிமல் லான்சா, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, புதிய கூட்டணியின் கம்பஹா மாவட்டத் தலைவர் நளின் பெனாண்டோ, ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க, நீர்கொழும்பு முன்னாள் மேயர் தயான் லான்சா, சுகீஸ்வர ஸ்ரீ பண்டார, அசங்க ஸ்ரீ நாத் உள்ளிட்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். அத்துடன் சங்கைக்குரிய மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், சமயத் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கலைஞர்கள், சட்டத்தரணிகள், தொழில் வல்லுநர்கள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட பெருந்தொகையான ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த நிமல் லான்சா எம்.பி.,
“வரலாற்றில் முதன்முறையாக கட்சி சின்னமோ, கட்சியோ இல்லாமல் ஒரு நிகழ்ச்சியை வெற்றி பெற செய்வதற்காக ஏராளமானோர் திரண்டுள்ளனர். தலைவரோ, தலைமைக் குழுவோ இல்லாமல் எமது அழைப்பை ஏற்று வந்துள்ள மக்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று சில அரசியல்வாதிகள் வாயால் வங்காளம் செல்கின்றனர். நெஞ்சை பிழந்து பேசுவது போன்று பேசுகின்றனர் ஆனால் அங்கு உண்மை இல்லை. ஒரு சதம் கூட தருவதில்லை. சற்று சிந்தித்து பாருங்கள் இவர்கள் கடந்த காலத்தில் வியாபாரிகளாகவும் அரசியல்வாதிகளாகவும் வாழ்ந்தார்கள். அவர்களில் யாரும் உங்களுக்கு உதவவில்லை. உங்கள் கோரிக்கைக்கு காது கொடுக்கவும் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வேளையிலோ, கொரோனா காலத்திலோ உங்களுக்கு உதவவில்லை. எதுவும் செய்யவில்லை. ஆனால் மேடைகளில் கதை அளக்கிறார்கள் . பிரச்சனைகளை கேட்டது, அவற்றை தீர்த்தது, உதவி செய்தது யார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பொய்யான வாக்குறுதிகளை வழங்குவதற்காக இந்த கூட்டணி ஒன்று கூடவில்லை. பொருளாதாரத் திட்டத்தை வலுப்படுத்தி நாட்டை மீட்டெடுக்கவே கூடியுள்ளது. இதுவரை வந்த அரசியல் பயணம் கடந்த இரண்டு வருடங்களில் பின்னோக்கி சென்றுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே 30 வருட அரசியல் பின்னோக்கிச் சென்றுள்ளது. கோட்டாபய ராஜபக்சவை அழைத்து வந்த போது, அரசியல் தெரியாத, புரியாத அவரை அழைத்து வர வேண்டாம் என்று கூறினேன். நான் கோபத்தில் அவ்வாறு சொல்லவில்லை. நாட்டின் அறிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அவரை அழைத்து வந்து, பாராளுமன்றத்தில் இல்லாத,, அரசியல் செய்யாத ஒருவரை கொண்டு வர வேண்டும் என்றனர். என்ன நடந்தது? படித்த சிலர் அவரை சூழ்ந்து கொண்டு, முதல் பணியாக வரியைக் குறைக்க ஆலோசனை வழங்கினர். கோட்டாபய ராஜபக்ஷ நேர்மையானவராக இருந்தாலும், இந்த ஆலோசனையை வழங்கியவர் நாலக கொடஹேவா. இப்போது அவர் சஜித்துக்கு அறிவுரை வழங்குகிறார். எமது 30 ஆண்டுகால அரசியல் அழிக்கப்பட்டது. நாம் மக்களுக்கு உதவி செய்து, அவர்களுக்கு காது கொடுத்து பணிகள் செய்து கட்டியெழுப்பிய அரசியலை, அழித்தவர்கள் நாலக கொடஹேவா போன்ற சில மேதைகளே.
அதன் பின்னர் GMO தலைவர் பாதேனியா கூறினார், இயற்கை உரங்களை கொண்டு வாருங்கள், அதற்காக, உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்றார். நாங்கள் 156 பேர் கையெழுத்திட்டு, இயற்கை உரப் பணியை ஒரேயடியாக செய்யாமல், படிப்படியாகச் செய்ய வேண்டும் என்று கூறியும், அதை கேட்கவில்லை. நாட்டின் விவசாய உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. பொருளாதாரத்திற்கு வர வேண்டிய பணம் இழக்கப்பட்ஞது. டொலர்கள் இல்லாமல் போனது. பெற்றோல், மின்சாரம், மருந்துகள் இல்லாமல் போனது. மக்கள் வீதிக்கு இறங்கினர். இந்த முடிவுகள் எடுக்கப்பட்ட போது, இந்த முடிவுகளை எடுக்க வேண்டாமென நாம் கூறினோம். அரசியல்வாதிகள் கூறியதை கேட்கவில்லை. அரசியல்வாதிகள் சொல்வதை கேட்காதீர்கள் என, நாலக கொடஹேவல தெரிவித்தார். நாங்கள் சொல்வதைக் கேளுங்கள், உங்களுக்கு பிழைக்காது என கூறினோம். நாட்டுக்கும் எம் அனைவருக்கும் பிழைத்துப் போனது.
எனவே, முதிர்ந்த, படித்த அரசியல்வாதிகளைத் தொடர்பு கொண்டு இந்தக் கூட்டணியை ஆரம்பித்தோம். இந்த நாட்டை காப்பாற்றக்கூடியவர்கள் தொடர்பு கொண்டு, மக்களுக்கு உண்மையை எடுத்துரைப்பதற்காகவே இந்த பணியை ஆரம்பித்துள்ளோம். மக்களுக்கு யதார்த்தத்தை சொல்ல, வருமானம் மற்றும் செலவு என்றால் என்ன? வருமானத்தைப் பெருக்கி, செலவுகளைக் குறைக்கும் முறையைக் கூற வேண்டும். இதைப் பற்றி அரசியல்வாதிகள் மேடைகளில் இதைப் பற்றி பேசுவதில்லை. பல்வேறு பொய்களை கூறுகின்றனர். அவர்கள் சொல்வதைச் செய்வதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. வருமானம் அதிகரித்து, செலவுகள் குறைக்கப்பட வேண்டும். இதை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் வாக்களிக்கலாம் அல்லது அளிக்காமல் போகலாம். அவர்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், மக்களுக்கு உண்மையையும், யதார்த்தத்தையும் புரிய வைக்க இப்புதிய கூட்டணி முடிவு செய்துள்ளது.
இன்று இந்தக் கூட்டணிக்கு ஒரு தலைவர், கட்சி, சின்னம் இழந்துவிட்டாலும், பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களும், அதிக எண்ணிக்கையிலான கட்சிகளும் சேர்க்கப்பட்டு மிகப்பெரிய கூட்டணி உருவாக்கப்படும். நாம் கூட்டணியை உருவாக்கியுள்ள நிலையில், இந்த நாட்டில் பல கட்சிகள் வெறும் பெயருக்காகவே இருப்பதைக் காட்டியுள்ளோம். கொழும்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பை நடத்தவே தலைவர்கள் உள்ளனர். மக்கள் அவர்களுடன் இல்லை. கட்சி, நிறம், ஜாதி தேவையில்லை என்று இன்று நாம் காண்பித்துள்ளோம். இவ்வாறு ஒன்றும் இல்லையென்றாலும் பல இலட்சக்கணக்கான மக்கள் இதற்காக இணைந்துள்ளனர் என காண்பித்துள்ளோம். எனவே, உண்மை, சத்தியம், யதார்த்தம் கொண்ட எமது புதிய கூட்டணியில் இணையுமாறு, இந்த நாட்டின் முற்போக்கான மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தாலும் மூன்று மாதங்களே தாக்குப் பிடிக்கலாம்.
அநுர குமார தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாதார வேலைத்திட்டமானது, காலியில் இருந்து கொழும்பு வரை பெண்கள் தங்கள் மார்பகங்களை காட்டியவாறு வந்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்குமாம். இதுதான் மக்கள் விடுதலை முன்னணியின் வேலைத்திட்டமா? அவ்வாறு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர முடியுமா? மதம், கலாசாரம், ஒழுக்கம் போன்றவற்றை கொண்டுள்ள பெண்களிடம் இதைச் சொல்லிக் கொண்டு வராதீர்கள். அவர்களது பெண்களிடம் சொல்லச் சொல்லுங்கள். மறுபுறம், விபச்சார தொழிலை சட்டமாக்கவுள்ளனராம். பெண்களை மார்பகத்தைக் காட்டிக்கொண்டு நடமாடுவதையும் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவதையும் பற்றி கூறியவற்றை வாபஸ் பெற வேண்டும் என்று நாம் கேட்டுக்கொள்கிறோம். இல்லை என்றால் அநுர குமாரவின் வாயில் இருந்து அதனை பெறும் வரை, அவர்களது பெலவத்தை அலுவலகத்திற்கு முன்பாக தொடர் போராட்டம் மேற்கொள்ளப்படும். பெண்களுடன் சென்று பெலவத்தை அலுவலகத்தை முற்றுகையிடுவோம். இதை நாம் சவாலுக்கு உட்படுத்த வேண்டும். எமது தேரர்கள் பிரித் நூல் கட்டினால் அதனை வீசுகின்றனர். மதம், போதனைகள் வேண்டாம் என்கிறார்கள். இவர்கள் தான் ‘அரகல’ போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள். கலாசாரத்தை அழிக்க வரும் மக்கள் விடுதலை முன்னணியை இந்த நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும்.
ஜனாதிபதி 14 மாதங்களில் 14 தடவைகள் வெளிநாடுகளுக்கு சென்றதாக அநுர குமார குறிப்பிடுகின்றார். இந்த நாட்டை மீட்பதற்கு சர்வதேசத்தின் உதவியைக் கோருவதற்கு சர்வதேச நாடுகளுக்குச் செல்ல வேண்டியவர் செல்ல வேண்டும். அநுர குமாரவினால் ஏனைய ஜனாதிபதிகளைப் போன்று சர்வதேச நாடுகளுக்குச் சென்று பணியாற்ற முடியாது. சர்வதேச நாணய நிதியம் வந்ததும் பயந்து ஒளிந்து கொண்டார். அவர்கள் வந்தால் இவ்வாறுதான் கொடுப்போம் என்று வாய்கிழிய பேசுகிறார். ஆனால் சர்வதேச நாணய நிதியம் பெலவத்தை அலுவலகத்திற்கு வந்த போது அநுர குமார தலைமறைவானார். வீழ்ந்த நாட்டை மீட்டெடுக்க, உலகை நன்றாக தெரிந்த, உலகத்துடன் இணைந்து செயற்படும் தலைவரே தேவை என்பதை, நாம் குறிப்பாக இளைஞர்களுக்கு கூற விரும்புகிறோம்.
உலகிற்கு புதிய தொழில்நுட்பத்துடன் செல்லும் தலைவர் தேவை. அவ்வாறின்றி ஏழ்மை மனப்பான்மை கொண்ட, கிணற்றுத் தவளை மனநிலையுடன் செயற்படும் ஊமை கதாபாத்திரங்கள் தேவையில்லை. அநுர குமார அவர்கள் கூட்டத்தை நடத்திய மைதானமே இது. அன்றைய தினத்லும் பார்க்க இன்று அதிகமான மக்கள் இங்கு வந்துள்ளனர். அநுர குமார ஜனாதிபதியாகியும் விட்டார். ஆனால் நாம் இப்போதுதான் பணியையே ஆரம்பித்துள்ளோம். 22 மாவட்டங்கள் மற்றும் 160 தொகுதிகள் எற எமத திட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம். ஜாஎல தொகுதியின் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று புதிய கூட்டணியில் இணையவுள்ளனர். இலங்கை முழுவதிலும் உள்ள பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள், ஏனைய கட்சிகளின் தொழிற்சங்கங்கள் எம்முடன் இணைந்து கொள்ளவுள்ளனர். முழு இலங்கையிலும் இவ்வாறே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு ஒத்திகை மாத்திரமே. அனைத்துக் கட்சிகளுடனும், அனைத்து எம்.பி.க்களுடனும் பேசி, துணைத் திட்டத்தை தயாரித்துள்ளோம். எனவே, அச்சமின்றி ஒன்றுபடுங்கள், பொய்யர்களும், தற்பெருமையாளரர்களாலும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.
ஜேவிபி எம்.பிக்களான அஞ்சான் உம்மா மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் கம்பஹா மாவட்டத்தில் இருந்தனர். எதுவும் செய்யவில்லை. நாலக கொடஹேவா கம்பஹாவில் இருந்து வாக்குகளை பெற்று ஓடிவிட்டார். நாலக கொடஹேவா, கம்பஹாவை சொர்க்கமாக மாற்றுவார் என்று மக்கள் நினைத்தார்கள். கோட்டாபய ராஜபக்சவையும் அழித்து, எம்மையும் அழித்து, நாட்டையும் அழித்து, கம்பஹா மாவட்டத்தையும் அழித்து, கப்பலை கொண்டு வந்து கடலையும் அழித்து, சுற்றுச்சூழலையும் அழித்து, நாட்டையே வங்குரோத்து செய்து விட்டு, தற்போது சஜித்திடம் ஓடிச் சென்றுள்ளார். நாட்டை வீழ்த்தியது ராஜபக்சவே என்று சஜித் கூறினார். நாட்டை வீழ்த்திய ராஜபக்சவின் அமைச்சரவையின் கடைசி நாளிலும் இருந்தவர் அவர். அவ்வாறான வர்கள் மக்களுக்கு உதவமாட்டார்கள். பொதுமக்கள் தினம் கிடையாது. மக்கள் விடுதலை முன்னணியில் 39 எம்.பிக்கள் வந்தனர். விஜித ஹேரத், அஞ்சன் உம்மா ஆகியோர் ஒரு பொதுமக்கள் தினத்தையும் மேற்கொள்ளவில்லை. மக்களின் பிரச்னைகளுக்கு செவிசாய்க்கவில்லை.
மக்கள் விடுதலை முன்னணி, ஜாஎலவுக்கு வந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து பேசியது. தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றனர். தாக்குதல் நடத்தியவர்களே தாக்குதலுக்கு பொறுப்பேற்க வேண்டும். அவர்களில் மூவர் ஜே.வி.பியின் தேசிய பட்டியலில் உள்ள இப்ராஹிமின் மகன்கள். அவர்கள்தான் முக்கிய பிரதிநிதிகள். கம்பஹா மாவட்ட கத்தோலிக்க மக்கள் ஜே.வி.பிக்கு வாக்களித்தால், இறந்த கத்தோலிக்க மக்களுக்கு துரோகம் செய்தே வாக்கு போட்டவர்கள் என்று அர்த்தம். இவர்களை கொன்றது இப்ராஹிமின் மகன்கள். அவர்கள் ஜேவிபியின் முழுநேர உறுப்பினர்கள். அப்படியானால், ஜே.வி.பிக்கு கத்தோலிக்க வாக்குகள் அளிக்கப்படக் கூடாது. இன்று வெள்ளைக்காரர்கள் போல் வந்து பேசுகிறார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்பில்லாத ஏனையோரை நோக்கி விரல் நீட்டுகின்றனர். தேசியப் பட்டியல் கொடுக்கப்பட்டதால், அந்த புதல்வர்கள் ஜே.வி.பி.க்கு பாரிய அளவில் உதவினர்.
சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் திறமையான சட்டத்தரணிகள், நளின் பெனாண்டோவும் நானும் வர்த்தகர்கள். ஜே.வி.பி.யின் அநுரகு மார, விஜித ஹேரத், சுனில் ஹதுன்னெத்தி, பிமல் ரத்நாயக்க ஆகியோருக்கு ஒரு வேலை இல்லை; வியாபாரம் இல்லை. எங்களை விட சிறப்பாக வாழ்கின்றனர். அதை எம் மக்களுக்கும் சொன்னால் சிறப்பு. வேலை இல்லாமல், வர்த்தகம் செய்யாமல் வாழலாம். அநுர குமார இந்த நாட்டுக்கு ஐந்து சதம் கூட வரி செலுத்தவில்லை. வேலையொன்று கொடுத்து சம்பளம் கொடுக்காதவர். நாம் உழைத்து, வியாபாரம் செய்து, வேலை கொடுத்து, வரி செலுத்தி, மக்களுக்கு செவிசாய்த்து, அபிவிருத்திக்கு பங்களித்தவர்கள். ஆனால் திருடர்கள் என்று, ஒன்றும் செய்யாதவர்கள் அழைக்கின்றனர். சிலர் இதை நம்புகிறார்கள்.
இந்த புதிய கூட்டணிக்காக 28 இற்கும் மேற்பட்ட கட்சிகளும், 60 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இலங்கையில் மிகப் பெரிய கூட்டணியை உருவாக்கி, அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் கொண்ட ஒவ்வொரு ஆசனத்திலும் மக்களை அணி திரளச் செய்து, ஜனநாயக ரீதியான ஒரு அதிகாரத்தை, ஒரு தலைவரிடம் அன்றி ஒரு தலைமைத்துவ சபைக்கு வழங்க முடியும். கோட்டாபாய ராஜபக்சவை அழைத்து வருமாறு சமூக வலைத்தளங்களில் பெரும் அலை எழுப்பப்படுகிறது. நாம் அப்பணிக்கு செல்லவில்லை. மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நாம் கோட்டாபாயவுக்காக இறங்கி வேலை செய்தோம்.. இதன் இறுதி முடிவு என்னவென்றால், சமூக வலத்தள மக்கள் வெளியேறினர், நாம் 120 பேர் மாட்டிக் கொண்டோம். எனவே, செயற்கையாக உருவாக்கப்பட்ட சமூக ஊடக அலைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் வாய் வீச்சாளர்களுக்கும் ஜோக்கர்களுக்கும் வாக்களிக்க வேண்டாம் என, உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என நிமல் லான்சா எம்.பி. இங்கு தெரிவித்தார்.