இந்திய மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இருந்து இங்கிலாந்தின் லோரன் பெல் விலகிக் கொண்டதை அடுத்து யுபி வொரியர்ஸ் அணி அந்த இடத்திற்கு இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்துவை இணைத்துள்ளது.
அத்தபத்து அவரது அடிப்படை விலையான 30 இலட்சம் இந்திய ரூபாவுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
2024 மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் அத்தபத்து விலைபோகாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த ஆண்டு டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அபாரமாக செயற்பட்டதோடு 16 போட்டிகளில் 31.33 ஓட்ட சராசரியுடன் மொத்தம் 470 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இதன்போது அவரது ஓட்ட வேகம் 131 ஆக இருந்ததோடு பந்துவீச்சிலும் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
உள்ளுர் மற்றும் டி20 லீக் தொடர்களிலும் சோபித்து வந்த சமரி, மகளிர் பிரீமியர் லீக்கின் மாற்று வெளிநாட்டு வீராங்கனையாகவே சேர்க்கப்பட்டுள்ளார்.
“இங்கிலாந்து வேகப்பந்து வீராங்கனை லோரன் பெல் எதிர்வரும் 2024 டாடா மகளிர் பிரீமியர் லீக் பருவத்தில் இருந்து வெளியேறியுள்ளார். பெல்லுக்கு மாற்றாக யுபி வொரியர்ஸ் இலங்கையின் சமரி அத்தபத்துவை இணைத்துள்ளது” என்று டபிள்யு.பி.எல். ஊடக பிரிவு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த விளையாட்டின் அதிரடி துடுப்பாட்ட வீராங்கனைகளில் ஒருவராக இலங்கை அணித்தலைவி இருப்பதோடு அவர் 120 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடிய அதிக அனுபவ மிக்க வீராங்கனையாகவும் உள்ளார். அவர் தமது அடிப்படை விலையான 30 இலட்சம் இந்திய ரூபாவுக்கு ஒப்பந்தமாகியுள்ளார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பருவத்திலும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றிருந்த பெல் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சுழற்பந்து சகலதுறை வீராங்கனையான சமரி அத்தபத்து வெளிநாட்டு வீராங்கனையாக எதிர்வரும் டபிள்யு.பீ.எல். தொடரில் பதினொருவர் அணியில் இடம்பெறுவதில் கடும் போட்டியை எதிர்கொள்ளவுள்ளார். ஏற்கனவே சொபி எக்லஸ்டன், அலிசா ஹீலி, டஹ்லியா மக்ராத் மற்றும் கிராஸ் ஹரிஸ் ஆகிய முன்னணி வெளிநாட்டு வீராங்கனைகள் யுபி வொரியர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் அண்மையில் வெளியிட்ட கடந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் வீராங்கனையாக தெரிவான சமரி அத்தபத்து ஐ.சி.சியின் சிறந்த ஒருநாள் மற்றும் டி20 அணித் தலைவியாகவும் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையிலேயே அவருக்கு டபிள்யு.பி.எல். வாய்ப்பு கிடைத்துள்ளது.
2024 டபிள்யு.பி.எல். தொடர் எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 17 ஆம் திகதி வரை பெங்களுர் மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் வொரியர்ஸ் அணி பெப்ரவரி 24 ஆம் திகதி ரொயல் சலஞ்சர்ஸ் பொங்களுர் அணியுடனான போட்டியுடன் தொடரை ஆரம்பிக்கவுள்ளது.