விஷ்வ புத்தர் மற்றும் அவலோகிதேஷ்வர எனும் பெயர்களில் புத்தரின் வழித்தோன்றல்கள் அல்லது அவதாரங்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டமை தொடர்பில் கைதான இரு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கடந்த ஜனவரி 21ஆம் திகி கைது செய்யப்பட்ட விஷ்வ புத்தர் என அடையாளப்படுத்திக் கொண்ட பெளத்த தேரரான ரத்னபுரே விமலபுத்தா எனும் சந்தேகநபருக்கு எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று (24) ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை வழங்கினார்.
சந்தேக நபரான துறவி கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு ஜனவரி 26ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சந்தேகநபரை இன்றையதினம் (24) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை, அவலோகிதேஷ்வர புத்தர் என தம்மை அடையாளப்படுத்தி வந்த மஹிந்த கொடித்துவக்கு எனும் சந்தேகநபருக்கு எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகேவினால் இன்று (24) குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகநபருக்கு மனநல சிகிச்சை தேவை என சட்ட வைத்திய நிபுணர் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
அதற்கமைய, சந்தேகநபரை சிறைச்சாலை ஊடாக மனநல சிகிச்சைக்கு அனுப்புமாறு நீதவான் உத்தரவிடப்பட்டுள்ளார்.
பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொள்ளும் குறித்த நபர் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு, பௌத்த மத தலைவர்களால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு அமைய, சந்தேகநபர் கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் பன்னிப்பிட்டியவில் வைத்து கடந்த ஜனவரி 15ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
‘அவலோகிதேஷ்வர’ என அடையாளப்படுத்திய மஹிந்தவிற்கு விளக்கமறியல்