64 லீற்றர் சட்டவரோதமான மதுபானத்தை பதுக்கி வைத்திருந்த இருவரை எதிர்வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் எஸ் . தியாகேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று (20) மாலை கல்லடி வேலூர் பிரதேசத்தில் காத்தான்குடி பொலிஸார் நடாத்திய யுக்திய போதையொழிப்பு சுற்றிவளைப்பின் போது குறித்த சட்டவரோதமான மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க தெரிவித்தார்.
60 மற்றும் 52 வயதுடைய நபர்களே சட்டவரோதமான மதுபானம் பதுக்கி வைத்திருந்த பெயரில் கைது செய்யப்பட்டவர்களாவர்.
ஒருவரிடருந்து 30 லீற்றர் சட்டவரோதமான மதுபானத்தையும் ,மற்றவரிடமிருந்து 34 லீற்றர் சட்டவரோதமான மதுபானத்தையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான் – மட்டக்களப்பு குறூப் நிருபர்