2024 பெப்ரவரி 01ஆம் திகதி முதல் தமது நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக அலி தாரிக் நியமிக்கப்பட்டுள்ளதாக யூனிலீவர் ஸ்ரீ லங்கா (Unilever Sri Lanka) அறிவித்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம், யூனிலீவரின் தெற்காசிய தலைமைக் குழுவிலும் தாரிக் அலி இணைவார். இதற்கு முன்னர், தாரிக் அலி லண்டனில் உள்ள யூனிலீவரின் தலைமையகத்தில், உலகளாவிய மாற்றங்களுக்கான CFO ஆக பணியாற்றியிருந்தார். 2003 இல் இக்குழுவில் சேர்ந்த தாரிக் அலி, ஐரோப்பா, தெற்காசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளில் உலகளாவிய மற்றும் நாட்டின் தலைமைப் பதவிகளை வகித்துள்ளார். அவர் Institute of Chartered Accountants in England & Wales (ICAEW) இன் உறுப்பினராக உள்ளதோடு லண்டன் PwC இல் பயிற்சி பெற்றவரும் ஆவார்.
யூனிலீவர் ஸ்ரீ லங்காவில் தமது புதிய நியமனம் குறித்து தாரிக் அலி கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் உள்ள எமது நுகர்வோர், ஊழியர்கள், வணிகப் பங்காளிகள் மற்றும் சமூகங்களுக்கு சேவை செய்வதற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் கிடைத்த இவ்வாய்ப்பு தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு முன்னர் இப்பதவியை வகித்த ஹாஜர் அலபிபி, ஒரு வலுவான வர்த்தகத்தை அமைத்து விட்டுச் செல்கின்றார். அவருடன் இணைந்தவாறு, வெற்றியை நோக்கி வளர்ந்து வரும் இலங்கையுடன் வெற்றியடைவதற்கு, இந்நாட்டுக்கான தலைமைத்துவத்துடன் இணைந்து, நோக்கத்துடன் வழிநடத்தப்படும் இவ்வர்த்தநாமங்களின் வலுவான தயாரிப்புகளை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளேன்.” என்றார்.
தற்போதைய தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளருமான , தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோனேசியாவில் யூனிலீவரின் போசணை வணிகத்திற்கான பொது முகாமையாளராக ஜகார்த்தாவில் தனது புதிய பணியை பொறுப்பேற்க செல்வதோடு, அவரிடமிருந்து தாரிக் அலி கடமைகளை பொறுப்பேற்கின்றார். ஹாஜர் அலபிபி கடந்த நான்கு வருடங்களில் மிகவும் சவாலான வணிகச் சூழலில் நிறுவனத்தை வழிநடத்தியுள்ளார். அந்த வகையில் அவர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு சந்தைகளில் எனது 23 வருட பணி அனுபவத்தில், இலங்கை மிகவும் நெகிழ்ச்சியான ஒன்றாக விளங்குவதோடு, அதன் பொருளாதாரம் மற்றும் முதலீட்டாளர்களுக்கான சாதகம் தொடர்பில் சிறந்த கண்ணோட்டத்தை நான் கொண்டுள்ளேன். எனது பதவிக்காலத்தில் என்னை இங்கு கவனித்துக் கொண்ட இலங்கைக்கு, இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு வழங்கப்பட்ட அரவணைப்பு, விருந்தோம்பல், சாதகமான அம்சங்கள் ஆகியன உண்மையிலேயே ஒப்பற்றவையாகும். இலங்கை மக்களால் வெளிப்படுத்தப்பட்ட மனிதநேயம், என்றென்றும் எனது மனதில் நிறைந்திருக்கும். நான் இங்கு இருந்த காலத்தில் உருவான அற்புதமான அனுபவங்கள் மற்றும் அர்த்தமுள்ள தொடர்புகள், எனது தொழில் மற்றும் தனிப்பட்ட பயணத்தில் ஒரு அழியாத அடையாளத்தை பதித்துள்ளன.” என்றார்.
கடந்த 85 ஆண்டுகளாக இலங்கையில் இயங்கி வரும் யூனிலீவர், நாட்டின் முன்னணியில் உள்ள, வேகமாக கொள்வனவு செய்யப்படும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) நிறுவனங்களில் ஒன்றாகும். ஒரு பொறுப்புள்ள பெருநிறுவன பிரஜை எனும் வகையில், இலங்கையின் நிலைபேறான எதிர்காலத்திற்கு பங்களிப்பதில் இந்நிறுவனம் தொடர்ச்சியான முக்கிய பங்கை ஆற்றி வருகிறது. Knorr, Sunlight, Signal, TRESemmé, Lifebuoy உள்ளிட்ட யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் 30 வர்த்தகநாம தயாரிப்புகள், வீட்டுப் பாவனைப் பொருட்களில் மக்கள் மனதில் இடம்பபிடித்தவையாக காணப்படுகின்றன. இவ்வர்த்தகநாமங்கள் உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவளிப்பதோடு தினமும் 22 மில்லியன் இலங்கையர்களின் வாழ்க்கையை மேம்படுத்துகின்றன