Monday, July 22, 2024
Home » TIN இலக்கம் பெற்று பாதிப்புகளை தவிர்க்குமாறு கோரும் COYLE

TIN இலக்கம் பெற்று பாதிப்புகளை தவிர்க்குமாறு கோரும் COYLE

by Rizwan Segu Mohideen
January 16, 2024 3:08 pm 0 comment

– இலங்கையில் TIN பதிவு நடைமுறை தொடர்பான விளக்கம்:  

வரி அடையாள இலக்கம் (TIN) என்பது நாடெங்கிலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தவறான விடயங்கள் பரப்பப்பட்டு வருகின்றன. TIN இலக்கத்தைக் கொண்டிருப்பது என்பது சுயமாகவே வரிக் கொடுப்பனவை மேற்கொள்ளும் பொறுப்பிற்கு வழிவகுக்காது என்பதை தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அத்தியாவசியம். அதற்கு மாறாக, எவ்விதமான சிக்கல்களுமின்றி பல்வேறு அரச நிறுவனங்களால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளை சௌகரியமாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை இது மக்களுக்கு வழங்குகின்றது.

ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வரிசெலுத்தும் அடையாள இலக்கத்தை (TIN) பெற்றுக்கொள்ளாதவர்கள் ரூபா 50,000 க்கு மேற்படாத தொகையை தண்டப்பணமாக செலுத்த வேண்டி ஏற்படலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.            

TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது என்பது சுயமாகவே வருமான வரி செலுத்தும் பொறுப்பிற்கு ஆளாக வேண்டி ஏற்படாது என்பதைச் சுட்டிக்காட்டி, இலங்கையில் வரி அடையாள இலக்கங்களின் வகிபாகம் தொடர்பில் நிதி அமைச்சு அண்மையில் தெளிவுபடுத்தியுள்ளது. 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய, வருடாந்த வரி விலக்கான ரூபா 1.2 மில்லியன் என்ற தொகைக்கு மேற்பட்ட தொகையை வருமானமாக ஈட்டுகின்றவர்கள் மாத்திரமே வருமான வரியைச் செலுத்த வேண்டும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட தொகைக்கு குறைவான வருமானத்தை ஈட்டும் எந்தவொரு இலங்கையரும் வரி செலுத்தத் தேவையில்லை. எனினும் 2023 டிசம்பர் 31, 2024 ஜனவரி 1 இல் 18 வயது கொண்ட அல்லது தமது 18 ஆவது பிறந்த தினத்தை எட்டியுள்ள எவரும் TIN க்காக பதிவை மேற்கொண்டு, அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். மேலும், நிதியாண்டில் (பதிவு செய்யப்பட்ட ஆண்டைத் தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) ரூபா 1,200,000 தொகைக்கு மேற்பட்ட வருமானத்தை ஈட்டுகின்ற எந்தவொரு நபரும் வருமான வரிக்காக தன்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. TIN ஐக் கொண்டிராத எந்தவொரு நபருக்கும், உள்நாட்டு இறைவரிச் சட்ட இலக்கத்தின் சரத்து 177 இன் கீழ், ரூபா 50,000 க்கு மேற்படாத தொகையை தண்டப்பணமாக செலுத்துவதற்கு முகங்கொடுக்க நேரிடலாம்.

TIN ஐப் பெற்றவுடன் ஒவ்வொருவருக்கும் ஒன்பது இலக்கங்கள் கொண்ட எண்ணொன்று ஒதுக்கப்படும். வருமான வரியைச் செலுத்துகின்ற நபர்கள் தமது TIN எண்ணின் முடிவில் மேலதிகமாக நான்கு இலக்கங்கள் கொண்ட எண்ணொன்றைப் பெற்றுக்கொள்வதுடன், வற் வரியைச் செலுத்துகின்றவர்களுக்கு அவர்களின் TIN எண் முடிவில் 7000 என்ற எண்ணும் சேர்ந்திருக்கும்.

இந்த தெளிவுபடுத்தல்களுக்கு மத்தியில், பெப்ரவரி 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு TIN ஐக் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்செயல்பாடுகளில் அடங்கியுள்ளவை:

  • நடைமுறைக் கணக்கொன்றை ஆரம்பித்தல்
  • கட்டுமானத் திட்ட அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளுதல்  
  • மோட்டார் வாகனமொன்றைப் பதிவு செய்தல்
  • உரிம அனுமதியைப் புதுப்பித்துக் கொள்ளுதல், மற்றும்
  • காணியின் உரிமப் பத்திரங்களை பதிவு செய்தல்.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க அவர்கள் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) இல்லாமல் வாகனத்தின் உரிமையாண்மையை அல்லது பதிவை மேற்கொள்ள முடியாது என வலியுறுத்தினார். தேவைப்படும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு TIN ஐத் தவறாது பெற்றுக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியதுடன், தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்கும் முகமாக TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்களை, திணைக்களத்திற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறிப்பாக தற்போதைய நெருக்கடியைப் பொறுத்தவரையில், மிகவும் நிலைபேணத்தகு பொருளாதார சூழலை நிலைநாட்டி, இலங்கை பொருளாதாரரீதியாக மீட்சி காண்பதற்கு அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பது முக்கியமானது. எனினும், வரி செலுத்த வேண்டிய பொறுப்பும், வசதியும் கொண்டவர்களால் வரிச்சுமை பொறுப்பேற்கப்படுவதை உறுதி செய்வது அத்தியாவசியமானது.

வருமானத்தை ஈட்டி, திறன்மிக்க மீள்பகிர்வு மூலம் சமத்துவமின்மையைப் போக்குவதற்கு தனிப்பட்ட வருமான வரி (PIT) முக்கிய பங்கு வகிக்கின்றது. இலங்கையில் PIT ஆனது சீராக வீழ்ச்சி கண்டு வருகின்றது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை எடுத்துக் கொண்டால், 2000 இல் 0.9% ஆகக் காணப்பட்ட நிலையில், 2022 இல் அது 0.2% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. எமது நாட்டை ஒத்த குறைந்த வருமானம் கொண்ட நாடுகளை விடவும் இது குறைவானது. நியாயத்தைப் பேணி, வரி தொடர்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள எல்லைகளுக்குள் பணவீக்கத்தால் ஏற்படும் விளைவுகளை உறுதி செய்யவும், வரம்புகளுக்கான தொகைகளை மீளவும் சீர்படுத்திக் கொள்வது அத்தியாவசியம். அதிகரித்த வருமான வசூல் மற்றும் சமமான வரி விதிப்பு ஆகியவற்றை அதிகரிப்பதற்கு வரிக்கான தொகை வரம்புகள், அவற்றுக்கான வரி அட்டவணைகள் மற்றும் வீதங்கள் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் சிறந்த அணுமுறையொன்று தேவைப்படுகின்றது.

பொருளாதாரரீதியாக எவ்விதமான தெளிவான நியாயப்படுத்தல்களுமின்றி 2000 ஆம் ஆண்டு முதல் PIT கட்டங்களில் ஒன்பது திருத்தங்களும், வரி விலக்கு வரம்புகளில் ஐந்து திருத்தங்களும் இடம்பெற்றுள்ள நிலையில், வரிக் கொள்கைகளில் அடிக்கடி நிகழ்ந்துள்ள மாற்றங்கள் வரி நிர்வாகத்தை மிகவும் சிக்கலாக்கியுள்ளதுடன், இணக்கப்பாட்டிற்கும் முட்டுக்கட்டையாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் நாடு முதலாவது காலாண்டில் இலக்கு வைக்கப்பட்ட வருமானத்தை எட்டாமல் போயுள்ள நிலையில், வருமான வரி வசூலிப்பை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது. வருமான இலக்குகளை எட்டுதல் மற்றும் வரிச் சுமையை நியாயமான வழிமுறையில் பகிர்ந்துகொள்வதை உறுதி செய்தல் ஆகியன வரி செலுத்துநர்கள் தளத்தை விரிவுபடுத்துவதற்கு அவசியம் என்பதுடன், மேற்குறிப்பிட்ட மறுசீரமைப்புத் திட்டத்தின் நோக்கங்களுடன் ஒத்திசைய வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றது.

TIN இலக்கமொன்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது?
வரிசெலுத்துநர் அடையாள இலக்கமொன்றை (TIN) பெற்றுக்கொள்வதை www.ird.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலமாக மக்கள் இலகுவாக மேற்கொள்ள முடியும். ‘எவ்வாறு வரிசெலுத்துநராக பதிவு செய்து கொள்வது’ (How to register as a Taxpayer) என்ற தலைப்பில் காணப்படும் விரிவான துரித வழிகாட்டலைப் பின்பற்றி, இணைய சேவைகளின் திரைகளில் தோன்றும் ஒவ்வொறு அறிவுறுத்தலையும் கட்டம் கட்டமாக மேற்கொண்டு இதனை பூர்த்தி செய்ய முடியும். அல்லாவிடின், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தின் 2 வது மாடியிலுள்ள ஆரம்ப பதிவுப் பிரிவுக்கு அல்லது எந்தவொரு பிராந்திய அலுவலகங்களுக்கும் நேரடியாகச் சென்று TIN பதிவை மேற்கொள்ளவும் முடியும். TIN விண்ணப்ப நடைமுறையின் போது உங்களது மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை சரியாக வழங்கவேண்டியது மிகவும் முக்கியம். இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறும் பட்சத்தில் திணைக்களத்தாலேயே பதிவு செய்யப்பட்டு, தண்டப்பணம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்றாலும், பதிவு செய்த அனைவருமே வரி செலுத்த தேவையில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையின் பிரகாரம், மாதமொன்றுக்கு ரூபா 100,000 என்ற தொகைக்கு மேற்பட்ட வருமானத்தை ஈட்டுகின்றவர்களே வருமான வரி செலுத்துவதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு குறிப்பிட்டவாறு வரி இலக்கமொன்றைப் பெற்றுக்கொள்வது மிகவும் இலகுவான படிமுறை என்பதுடன், அனைத்து பிரஜைகளாலும் அதனை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும். வரி செலுத்த வேண்டிய வருமான வரம்பிற்குள் நீங்கள் உள்ளீர்களா, இல்லையா என்பதற்கு அப்பால், வரிப் பதிவு இலக்கமொன்றைக் கொண்டிருப்பது பல்வேறு வழக்கமான செயல்பாடுகளின் போது தேவையானதாக உள்ளது. மிகவும் முக்கியமான இந்த மாற்றத்தின் போது, உண்மையான விபரங்களை தெளிவாக அறிந்து, புதிய ஒழுங்குமுறைகளுக்கு இணங்கி நீங்கள் நடப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது.

அனைத்துப் பிரஜைகளுக்கும் பயன்கிட்ட வேண்டும் என்பதே வரி விதிப்பு கட்டமைப்பின் நடைமுறைகளை சீர்படுத்தி, அவற்றின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த வேண்டியதன் நோக்கமாகும்.

அனைத்தையும் தெளிவாக அறிந்து, தண்டனையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்!

பின்குறிப்பு:

https://www.advocata.org/

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT