Thursday, July 25, 2024
Home » அரச வருமானத்தை மேம்படுத்தும் முகமாக, VAT வரி அமுலாக்கலுக்கு மக்களின் ஆதரவு தேவை

அரச வருமானத்தை மேம்படுத்தும் முகமாக, VAT வரி அமுலாக்கலுக்கு மக்களின் ஆதரவு தேவை

by Rizwan Segu Mohideen
January 16, 2024 3:28 pm 0 comment

பெறுமதி சேர் வரி (வற்/VAT) தொடர்பில் நாடெங்கிலும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அரசியல் நோக்கம் கொண்ட கூற்றுக்கள், தவறாக வழிநடத்தும் ஊடக அறிக்கைகள் மற்றும் சந்தர்ப்பவாத வர்த்தகர்களால் பெரும் குழப்பநிலை எழுந்துள்ளது.

பொருளாதார சவால்களுக்கு எதிராக நாடு போராடி வருகின்ற நிலையில், உறுதியான மற்றும் நிலைபேணத்தகு வளர்ச்சிக்கு ஈட்டப்படும் வருமானத்தை முடுக்கி விடுவது மிகவும் இன்றியமையாததாக காணப்படுகின்றது. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்தமையும் அண்மைய பொருளாதார நெருக்கடிக்கு பகுதியளவில் ஒரு காரணமாக உள்ள நிலையில், இலங்கையில் வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது வெறும் 7.3% ஆக காணப்படுகின்றமை உலகிலேயே மிகவும் குறைந்த விகிதங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்புத் திட்டமானது 2026 ஆம் ஆண்டளவில் இந்த விகிதத்தை 14% என இரட்டிப்பாக்க முனைவதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருமானம் சுமார் 15% ஐ எட்டும் போது நாடுகள் பலவும் உயர் மட்ட வளர்ச்சிக்கு முகங்கொடுத்துள்ளமை இதற்கு சான்றாக உள்ளது.   

பண்டங்கள் மற்றும் சேவைகள் மீதான ஒரு தட்டை வரியாகவுள்ள வற் என்பது பாரம்பரியமான விற்பனை வரியிலிருந்து வேறுபட்டது. விற்பனை நடைபெறும் இடத்தில் நுகர்வோர் இதன் ஒட்டுமொத்த தொகையை செலுத்துவதை விடவும், கொடுக்கல்வாங்கல் நடவடிக்கையொன்றின் போது பல்வேறுபட்ட தரப்புக்கள் வரிச்சுமையை பகிர்ந்து கொள்ளும் நடைமுறையை வற் வரி கொண்டுள்ளது. 2014 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் வழக்கமான வற் வரி 15% இலிருந்து 18% ஆக அதிகரித்துள்ளதுடன், இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்கள், மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை, பல்வேறுபட்ட சேவைகளுக்கு இது விதிக்கப்படுகின்றது. வற் வரித்தொகையை இறைவரித் திணைக்களத்திடம் செலுத்துவது என்பது பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் காணப்படுவதுடன், மாதாந்தம் அல்லது காலாண்டு அடிப்படையில் அவற்றைச் செலுத்துவதற்கும் இடமளிக்கின்றது.

TIN இலக்கம் பெற்று பாதிப்புகளை தவிர்க்குமாறு கோரும் COYLE

துரதிர்ஷ்டவசமாக இலங்கையின் நிலைமையானது ஏனைய பல நாடுகளை விடவும் சிக்கலானது. வட்டி வீதங்களைக் குறைக்குமாறு ஜனாதிபதியும், மத்திய வங்கியின் ஆளுநரும் அனைத்து நிதி நிறுவனங்களையும் பல முறை கேட்டுக்கொண்ட போதிலும், அவை இன்னமும் கூடுதலாக காணப்படுவதுடன், இது சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை பின்தள்ளுகின்றது. வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி தேவை என்பதை அது தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட மோசமான நிதி முகாமைத்துவத்தின் விளைவாக இச்செலவுகள் காணப்படுவதுடன், நிதி நிறுவனங்கள் கைக்கொண்டுள்ள குறுகிய கால இலாப நோக்குடனான அண்மைய கொள்கைகளும் எமது தற்போதைய பொருளாதார சூழலுக்கு பொறுப்பாகும்.

அரசாங்கம் இந்த நிலைமையை ஒரு நுட்பமான சமநிலையில் பேண விளைகின்றது. வரி விதிப்பினூடாக வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள அதேசமயம், வரிகள் அதிகரிக்கப்படும் போது பொருளாதாரத்தின் நலிவு தொடர்பான கரிசனைகளும் உள்ளன. வரிகள் அதிகரிக்கும் போது மக்களின் கொள்வனவுச் சக்தி குறைவடையும் என்பதால், வளர்ச்சியை அதிகரிப்பதற்கான எமது இலக்கிற்கு இது பெரும் சவாலாக உள்ளது. பொருளாதாரம் நலிவுறும் போது அதன் விளைவாக வரி வருமானமும் வீழ்ச்சியடையும் சாத்தியம் உள்ளது.

வற் விலக்களிப்பில் திருத்தங்கள்:
வற் வரி அதிகரிப்பிற்கு மத்தியிலும் குறிப்பிட்ட சில அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளதுடன், குடிமக்களுக்கு அதன் மூலமாக நிவாரணம் கிட்டுகின்றது. கோதுமை, கோதுமை மா, அரிசி, அரிசி மா, பாண் மற்றும் குழந்தைகளுக்கான பால்மா போன்ற உணவுப் பொருட்கள், சுகாதாரப் பராமரிப்பு சேவைகள், மருந்து வகைகள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சத்திர சிகிச்சைப் பொருட்கள், ஆயுள்வேத தயாரிப்புக்கள், வைத்தியசாலை தங்கும் அறைக் கட்டணங்கள் நீங்கலாக மற்றும் பலவற்றுக்கு வற் விலக்களிக்கப்பட்டுள்ளது. நிதிச் சேவைகள், இறக்குமதி தீர்வை விலக்களிப்புக்கள், ஏற்றுமதிகள், கல்வி மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு தொடர்ந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது. வற் வரி வருமானத்தை உச்சப்படுத்தும் அதேசமயம் குறைந்த வருமானம் ஈட்டும் சமூகங்களைப் பாதுகாப்பதற்காக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.     

வற் விலக்களிப்பு திருத்தங்களின் முக்கியமான அம்சங்கள்:

  1. கோதுமை, கோதுமை மா, மற்றும் குழந்தைகளுக்கான பால்மா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தொடர்ந்தும் வற் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
  2. வைத்தியசாலை தங்கும் அறைக் கட்டணங்கள் நீங்கலாக, சுகாதாரப் பராமரிப்பு சேவைகள், மருந்து வகைகளுக்கு தொடர்ந்தும் வற் வரி விலக்களிக்கப்பட்டுள்ளது.
  3. வங்கிக் கணக்குகள் மற்றும் காப்புறுதி உள்ளிட்ட நிதிச் சேவைகளுக்கு தொடர்ந்தும் விலக்களிக்கப்படும்.
  4. குறிப்பிட்ட தயாரிப்புக்களுக்கான இறக்குமதித் தீர்வை விலக்களிப்புக்கள் தொடர்ந்தும் வழங்கப்படும்.
  5. ஏற்றுமதிகள், கல்வி மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகியவற்றுக்கு தொடர்ந்தும் விலக்களிக்கப்படும்.  

வற் வரி நடைமுறையை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கு, உரிய அதிகாரிகள் மக்களுக்கு முற்கூட்டியே தெளிவுபடுத்தல் வேண்டும். மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடும். தவறான தகவல் இலகுவாக பரப்பப்படக்கூடும். மக்கள் உண்மையை அறிந்திருத்தல் வேண்டும். மருந்துப் பொருட்கள் மற்றும் மருந்துகள் வற் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டவை என்பது அத்தகைய உண்மைகளில் ஒன்றாகும். எனினும் முறையான விழிப்புணர்வின்மை வர்த்தகர்கள் நம்மைச் சுரண்டுவதற்கு அவர்களுக்கு இடமளிக்கின்றது.

இப்புதிய வரிச் சூழலுக்குள் இலங்கை காலடியெடுத்து வைக்கும் போது, ஏய்ப்பு மற்றும் வரி செலுத்தாமை போன்றன முதலில் அகற்றப்பட வேண்டிய தடைகளாக காணப்படுகின்றன. அடிப்படையில், வரிப்பணம் மக்களின் நலனுக்காகவே செலவிடப்படுகின்றது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் கட்டியnழுப்ப வேண்டிய தேவையொன்று அரசாங்கத்திற்கு உள்ளது. இலங்கையில் அண்மைய வற் வரி அதிகரிப்பிற்கு பொது மக்களின் ஆதரவைத் திரட்டுவதில் உள்ள இரு பாரிய முட்டுக்கட்டைகளை COYLE இனங்கண்டுள்ளது. முதலில் பொது நிதியைப் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மைக்கான தேவை உள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் மற்றும் அதிகார சபைகள் அனைத்தும் வாக்குகளை சம்பாதிப்பதற்காக தேவையற்ற வகையில் பொதுத்துறையில் ஆட்சேர்ப்பினை மேற்கொண்டு நாட்டை சுமைக்குள் தள்ளி விட்டுள்ளதுடன், இது வினைத்திறனற்ற அரச துறையையும் விளைவித்துள்ளது. தேர்தல் ஆண்டு நெருங்கியுள்ள நிலையில், சந்தர்ப்பம் கிடைக்கும் பட்சத்தில் அதேவகையில் நிதி முறைகேடாக நிர்வகிக்கப்படலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளதுடன், இது வற் வரி சேகரிப்பு முயற்சிகள் மற்றும் நாட்டின் மீள்எழுச்சித் திட்டத்தை தடம்புரளச் செய்யும்.

இரண்டாவதாக, அரச அதிகாரிகளின் பொறுப்புணர்வற்ற செயற்பாடுகள் நிதி நெருக்கடியை தோற்றுவித்துள்ளதுடன், பொதுமக்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தி, சாதகமான கொள்கைகளுக்கு ஆதரவளிப்பதில் கூட அவர்களை பின்னிற்கச் செய்கின்றது. இப்பிரச்சினைக்குத் தீர்வாக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற வசதிகளுக்கான செலவுகள் மற்றும் அவர்கள் மேற்கொள்கின்ற செலவுகள் மாதாந்த அடிப்படையில் கணக்காய்வாளர் நாயகத்தால் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும். ஆடம்பர வரப்பிரசாதங்கள், பல எண்ணிக்கையான வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவைக்கதிகமாக பாதுகாப்பு படையணி போன்றவற்றை தெளிவாக கட்டுப்படுத்தி, தேவையான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் வரியை துஷ்பிரயோகம் செய்கின்றது என்ற பொதுமக்களின் அபிப்பிராயத்தைப் போக்குவதற்கு இந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக மேற்கொள்ளப்படவேண்டியுள்ளதுடன், கடந்த காலங்களில் இவை பெரும் களங்கமாக காணப்படுவதுடன், மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கு பிரதான தடைக்கல்லாக உள்ளன.

அண்மைய வற் வரி மாற்றங்கள் தொடர்பில் தெளிவாக அறிந்திருப்பது வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் மிகவும் முக்கியமானது. வரி நிர்வாகத்தை சீரமைத்தல், தேவையான துறைகளுக்கு வளங்களை பிரயோகித்தல் மற்றும் போட்டித்திறன் மிக்க மூலோபாயங்களினூடாக வருமானத்தை அதிகரித்தல் ஆகியவற்றுடன் இந்த மாற்றம் ஆரம்பிக்கப்படல் வேண்டும். எனினும், வற் வரி அதிகரிப்பில் மாத்திரம் முழுமையாக தங்கியிருப்பது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு தீர்வாகாது. ஸ்திரத்தன்மையை அடையப்பெறுவதற்கு பொருளாதாரத்தின் மத்தியில் ஒட்டுமொத்தமாக போட்டித்திறனை உறுதி செய்தல் வேண்டும்.

இந்த வரி ஒழுங்குமுறைகள் நிலைபேணத்தகு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு இன்றிமையாதவை. மக்களின் வரிப் பங்களிப்புக்கள் எவ்வாறு வரலாற்றிலேயே மிகவும் முக்கியமானதொரு நிதி நெருக்கடியிலிருந்து மீள நாட்டிற்கு உதவுகின்றன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவது மிகவும் முக்கியமானது.  

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT