தேயிலை செய்கைக்காக பயன்படுத்தப்படும் T 750, T 709, T 200 உரங்களின் விலைகளை ரூ. 2,000 இனால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (16) விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது சந்தையில் குறித்த உரங்களின் 25kg மூடையின் விலை ரூ. 10,000 முதல் 12,000 வரை நிலவுகின்றது.
அதற்கமைய, குறித்த உரங்களின் விலைலகள் ரூ. 8,000 முதல் 10,000 ஆக குறையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலைச் சலுகையானது, சிறிய மற்றும் நடுத்தர தேயிலை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், பாரிய அளவிலான தேயிலை உற்பத்தி நிறுவனங்களுக்கு சிறிய அளவிலான விலைக் குறைப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் தேயிலை உற்பத்தி செய்யும் 8 மாவட்டங்களின் தேயிலை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலொன்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்றிருந்தது.
இதன் போது, அரசாங்கத்தின் உர நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலைக்கான உரங்களின் தரம் சிறப்பானவை என பிரதிநிதிகள் தெரிவித்த நிலையில் அது தொடர்பில் கவனத்தில் எடுத்த விவசாய அமைச்சு குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அந்த வகையில் இவ்வாறு குறைக்கப்படுகின்ற ரூ. 2,000 உரச் சலுகைக்காக செலவிடப்படும் ரூ. 1200 மில்லியனை தேயிலை சபை ஏற்கவுள்ளது.
நாட்டின் தேயிலை கைத்தொழில் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக தேயிலைப் பயிர்ச்செய்கைக்கான உரத்தை கட்டாயமாக்குவதற்காக இந்த நிவாரணம் வழங்கப்படுவதாக, விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.