Sunday, April 21, 2024
Home » நீண்ட கால அபிவிருத்திப் பங்காளி இந்தியாவிடமிருந்து ரூ. 1,600 கோடி பெறுமதியான எஞ்சின்கள் நன்கொடை

நீண்ட கால அபிவிருத்திப் பங்காளி இந்தியாவிடமிருந்து ரூ. 1,600 கோடி பெறுமதியான எஞ்சின்கள் நன்கொடை

- புகையிரத போக்குவரத்து சேவை மேம்பாட்டில்  தொடரும் இந்தியாவின் பங்களிப்பு

by Rizwan Segu Mohideen
January 15, 2024 8:45 pm 0 comment

இலங்கையின் நீண்டகால அபிவிருத்திப் பங்காளியாக, இந்திய அரசாங்கம் அதன் சலுகைக் கடன்கள் மற்றும் மானியத் திட்டங்களின் கீழ் இலங்கையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க பங்காற்றி வருகிறது. நாடு நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் சமயங்களில் உதவிக்கரம் நீட்ட முதலில் ஓடி வரும் அயலவரான இந்தியா கொவிட் தொற்றின் போதும் பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கிய போதும் வழங்கிய ஆதரவை சாதாரணமாக கருதி விட முடியாதவை.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு போக்குவரத்து,விவசாயம்,மீன்பிடி, கலாச்சாரம், சுற்றுலா,சுகாதாரம்,மின்சாரம்,வீடமைப்பு, என அநேக துறைகளில் ஒத்துழைப்பு நல்கி வருகிறது. இவ்வாறு ஒத்துழைக்கும் பல்வேறு துறைகளில், போக்குவரத்துத் துறைக்கான உதவிகள் மிகவும் பிரதானமானவையாகும். நாட்டின் பஸ் மற்றும் புகையிரத சேவைகளை அபிவிருத்தி செய்வதில் இந்தியாவின் பங்கு பிரதானமாக இருந்தது. எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் சலுகைக்கடன் அடிப்படையிலோ நிவாரணமாகவோ இந்தியா தனது ஆதரவை வழங்கி வருகிறது.

இலங்கையின் போக்குவரத்துத் துறைக்கு புகையிரத சேவையின் மேம்படுத்தல் மற்றும் நவீனமயமாக்கல் என்பன பிரதானமாக கருதப்படுகிறது.இந்த நிலையில் கடந்த 2009 இல் இந்தியாவின் இர்கொன் நிறுவனம் இலங்கையில் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இதன் கீழ் வடக்கு மாகாணத்தில் (253 கிமீ) முழு புகையிரத பாதை வலையமைப்பையும் புனரமைப்பதன் மூலமும், தெற்கு கரையோரப் பாதையை (115 கிமீ) மேம்படுத்துவதன் மூலமும் புகையிரத சேவையின் நவீனமயமாக்கலுக்கு இந்தியா பங்களித்துள்ளது. 330 கிமீ நீளமுள்ள இபுகையிரத பாதையில் நவீன சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பு மூலம் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கும் பங்களிப்பு வழங்கப்பட்டதை மறந்து விட முடியாது.

இந்த நிலையிலே வரலாற்றின் முதன் முறையாக 1,600 கோடி ரூபா பெறுமதியான 20 புகையிரத எஞ்ஜின்கள் இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு நன்கொடையாக கிடைத்துள்ளது.இதனை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் அறிவித்திருந்தார்.

அவ்வாறு அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்றுள்ள ஒரு புகையிரத என்ஜினின் பெறுமதி 800 மில்லியன் ரூபாவென்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்தின் பின்னர் இந்தியாவிலிருந்தோ அல்லது வேறு நாடுகளிலிருந்தோ முதன்முதலாக கிடைக்கப்பெற்ற புகையிரத என்ஜின் நன்கொடை இதுவென்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

20 புகையிரத எஞ்ஜின்களைப் பெற்றுக்கொள்ளவதற்காக இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதோடு இலங்கை அரசு எழுத்து மூல வேண்டுகோளையும் முன்வைத்திருந்தது.

அரசாங்கத்தின் வேண்டுகோளை செவிமடுத்து நன்கொடையாக என்ஜின்களை வழங்க முன்வந்தது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கையிலிருந்த முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கும் அமைச்சர் நன்றியை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இலவசமாக வழங்கும் எஞ்ஜின்களை பார்வையிடுவதற்காக இலங்கையிலிருந்து ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழுவே இந்தியா சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வங்குரோத்து நிலையை அடைந்திருந்த இலங்கை அரசாங்கத்திற்கு செலவுகளை மட்டுப்படுத்தவும் அபிவிருத்திகளுக்கான நிதி ஒதுக்கீடுகைளை குறைக்கவும் நேரிட்டிருந்தது.நீண்டகாலமாக இலங்கையின் புகையிரத சேவை மிக மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்தது. அந்த நிலையில் அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு முடியாதநிலை காணப்பட்டதுடன் நீண்டகாலமாக புகையிரத திணைக்களம் நட்டமீட்டி வரும் நிலையில் அதற்காக முதலீடு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாமல் சூழ்நிலை அரசுக்கு ஏற்பட்டிருந்தது.

சனத்தொகை அதிகரிப்பினால் புகையிரத சேவையை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஒருபோதுமில்லாதவாறு அதிகரித்திருந்ததோடு யாத்திரிகளுக்கான போக்கு வரத்து சேவை ,சுற்றுலாத்துறை,பண்டப் போக்குவரத்து, என்பவற்றுக்காக புகையிரத சேவைகளை மேம்படுத்த வேண்டிய காட்டாயம் உருவாகியிருந்தது. புகையிரத சேவையை நவீனமயப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்திருந்த நிலையிலே பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக 1600 கோடி ரூபா பெறுமதியான எஞ்சின்கள் இலங்கைக்கு கிடைக்க இருக்கிறது.

பெரும்பாலான புகையிரத சேவை சார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் வெளிநாட்டு கடன்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகையிரத பாதை புனரமைப்பு புகையிரத எஞ்சின்கள் கொள்வனவு மற்றும் தேவையான உதிரிப்பாகங்களையும் வெளிநாட்டுக் கடன் மூலமே போக்குவரத்து அமைச்சு பெற்று வருகிறது.

உலகில் மிகப் பெரிய புகையிரத சேவை வலையமைப்பை கொண்டுள்ள இந்தியாவில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் புகையிரத சேவையை பயன்படுத்துகின்றனர். ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்குகள் பரிமாறப்படுகின்றன. தினமும் 14,444 புகையிரத சேவைகள் இயங்கும் நிலையில் இலங்கையில் பஸ் மற்றும் புகையிரத என்ஜின், புகையிரத பெட்டி உற்பத்தித் துறையில் முன்னணியில் இருக்கம் இந்தியா தனது அண்டை நாட்டின் போக்குவரத்து துறை உயர்வில் தனது பங்களிப்பை தொடர்ந்து வழங்கிவருகிறது. அதிகமாக இந்திய தயாரிப்பு புகையிரத பெட்டிகளே இலங்கையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்தோடு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பஸ்களே பெருமளவில் இங்கு சேவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.இலகு கடன் அடிப்படையில் பல்வேறு சந்தர்ப்பங்களின் இலங்கைக்கு புகையிரதகளும் பஸ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் 2015 இல் இலங்கைக்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது புதிய கடன் வரியை (LoC) ஆரம்பத்தில் அறிவித்திருந்தார்.இதன் பிரகாரம் கடந்த 2017 இல் புகையிரத சேவை அபிவிருத்திப் பணிகளுக்காக இந்திய அரசாங்கத்திடம் இருந்து 318 மில்லியன் டாலர் கடனுதவியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் நிதி அமைச்சு கையெழுத்திட்டது.இந்திய அரசாங்கம் ஏற்கனவே இலங்கை புகையிரதவே துறையை மேம்படுத்த எக்சிம் வங்கியின் மூலம் கடனுதவி வழங்கியிருந்ததோடு இதன் மொத்தப் பெறுமதி 966 மில்லியன் டொலர்களாகும், அவை தெற்கு மற்றும் வடக்கு புகையிரத பாதைகளை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டன.

புகையிரத சேவைகளை மேம்படுத்துவதற்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி யை பெற 2022 இல் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இது தவிர குளிரூட்டப்பட்ட புகையிரத வண்டியொன்று இந்தியாவின் 318 மில்லியன் டொலர் புதிய கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதோடு 2022 பெப்ரவரியில் இதன் சோதனை ஓட்டம் இடம்பெற்றிருந்தது.

2014-15 ஆம் ஆண்டில் 318 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான புகையிரத பாதைகளை மேம்படுத்தல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நிதி வழங்க உடன்பாடு காணப்பட்டது. அப்போதிலிருந்து, இந்தியாவில் இருந்து உயர்தர புகையிரத பெட்டிகள் மற்றும் குளிரூட்டப்பட்ட புகையிரத பெட்டிகள் என்பன இலங்கையில் புகையிரதவே உள்கட்டமைப்பு மற்றும் பயண அனுபவத்தை வலுப்படுத்த உதவியது. இந்த திட்டத்தின் கீழ் புகையிரத பாதைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

அத்தோடு கொழும்பில் இருந்து மாத்தறை வரையிலான புகையிரதப் பாதையை மேம்படுத்துவதற்கும், ஓமந்தை-பளை புகையிரத பாதை அமைப்பதற்கும் இந்தியாவின் கடன்உதவி பங்களிப்பு செய்துள்ளது. மடு தேவாலயம்-தலைமன்னார் பாதை மதவாச்சி-மடு பாதை, பளை-காங்கேசன்துறை பாதை,அனுராதபுரம்-ஓமந்தை புகையிரத பாதை , சமிக்ஞை கட்டமைப்பு அபிவிருத்தி ,புகையிரதவே உள்கட்டமைப்பு வசதிகள், வேலை வாய்ப்பு உருவாக்கல், பொருளாதார வளர்ச்சி, பயணிகள் வசதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்தியாவின் ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தது.இது புகையிரதவே உட்பட போக்குவரத்துத் துறையில் பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் அமைந்திருந்தன.

இந்திய அரச நிறுவனமான இர்கொனினால் 91.27 மில்லியன் டொலர் செலவில் வட மத்திய பகுதியில் உள்ள மஹோவில் இருந்து ஓமந்தை வரையிலான 128 கிலோமீற்றர் நீளமான பாதையை யாழ்ப்பாணத்திற்கான புகையிரத பாதையுடன் இணைக்கும் வகையில் மேம்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்த மேம்படுத்தல் காரணமாக யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை ஒரு மணிநேரம் குறைக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் புகையிரதவேயை மேம்படுத்த இந்தியா ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் கடனாக வழங்கியுள்ளது .அண்மையில் 500 ஜீப் வண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 125 ஜீப்வண்டிகளை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கியமை மற்றொரு விசேட அம்சமாக கருதப்படுகிறது.

– சூரியா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT