Wednesday, October 9, 2024
Home » கொழும்பில் உலக ஹிந்தி தினம்

கொழும்பில் உலக ஹிந்தி தினம்

- இந்திய உயர் ஸ்தானிகர், கல்வி அமைச்சரால் அங்குரார்ப்பணம்

by Rizwan Segu Mohideen
January 11, 2024 8:28 pm 0 comment

உலக ஹிந்தி தின நிகழ்வுகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தால் நேற்றும் (10) இன்றும் (11) கொழும்பில் இடம்பெற்றது.

களனிப் பல்கலைக்கழகம், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகம், ரஜரட்ட பல்கலைக் கழகம், இலங்கை கட்புல மற்றும் அரங்கேற்றக் கலைகள் பல்கலைக் கழகம் மற்றும் இந்தியாவின் கர்மா தேவி ஞாபகார்த்த பி ஜி கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை மன்றக் கல்லூரியிலும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்திலும் இந்த இரு நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன.

உலக ஹிந்தி தின நிகழ்வின் பிரதம விருந்தினராக கல்வி அமைச்சர் டாக்டர் சுசில் பிரேமஜயந்த பங்கேற்றிருந்த நிலையில் உயர் ஸ்தானிகர் ஶ்ரீ சந்தோஷ் ஜா 10 ஆம் திகதி அன்று நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார். அத்துடன் கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்த குமார் கௌரவ விருந்தினராக இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர், ஹிந்தி மொழியானது சர்வதேச மொழியாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். இன்று உலகளாவிய ரீதியில் சுமார் 600 மில்லியன் பேர் ஹிந்தி மொழி பேசுபவர்களாக இருக்கும் நிலையில் உலகளவில் அதிகளவில் பேசப்படும் மொழிகளில் ஹிந்தி மொழியானது மூன்றாம் இடத்தில் உள்ளது. ஹிந்தி பயிலும் மாணவர்கள் இந்தியாவில் அம்மொழியைக் கற்பதற்கான புலமைப் பரிசில்களை வழங்கியமை, பேராசிரியர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஹிந்தி மொழி திறனை வளர்ப்பதற்கான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல திட்டங்களுடன் ஹிந்தி மொழியின் மேம்பாட்டுக்காக சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் கடந்த வருடம் ஈறாக மேற்கொண்டுவரும் செயற்பாடுகளையும் அவர் இங்கு நினைவூட்டியிருந்தார். அத்துடன் இலங்கையில் உள்ள ஹிந்தி மொழி புலமையாளர்கள் மற்றும் நிறுவனங்களைப் பாராட்டிய அவர், இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு இம்மொழி மீதான பற்றினை வெளிப்படுத்தியமைக்காகவும் நிகழ்வுடன் இணைந்திருந்தமைக்காகவும் நிகழ்வுக்கு சமூகமளித்திருந்தவர்களுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்திருந்தார்.

முதல் நாளன்று நடைபெற்ற மூன்று அமர்வுகளில் எழுத்து மூலமான சமர்ப்பணங்கள் 25 ஹிந்தி புலமையாளர்களால் முன்வைக்கப்பட்டிருந்தன. ஹிந்தி இலக்கியத்தில் பௌத்தத்தின் தாக்கம் முதல் இலங்கையில் இந்தியின் பிரபல்யம் வரை அதற்கான தலைப்புகள் வழங்கப்பட்டிருந்தன. முதல் நாள் நிகழ்வுகளில் 200க்கும் மேற்பட்ட புலமையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டின் இரண்டாம் நாளில், பிரதி உயர் ஸ்தானிகர் டாக்டர். சத்யாஞ்சல் பாண்டே பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். அத்துடன் கிட்டத்தட்ட 20 ஆய்வுகள் ஹிந்தி மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இந்திய அரசாங்கத்தின் ஹிந்தி மத்திய நிறுவனம் ஏற்பாடு செய்த ஹிந்தி தேர்வுகளுக்கான தகுதிச் சான்றிதழ்களும் இலங்கை மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1949 இல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையில் ஹிந்தி மொழி பேசப்பட்டதைக் குறிக்கும் முகமாக ஒவ்வொரு வருடமும் ஜனவரி 10 ஆம் திகதி உலக ஹிந்தி தினம் கொண்டாடப்படுகின்றது. 1975 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே முதலாவது உலக ஹிந்தி மாநாடு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இலங்கையில் 88 பாடசாலைகளிலும் 7 பொதுப் பல்கலைக்கழகங்களிலும் ஹிந்தி மொழியானது வெளிநாட்டு மொழியாக கற்பிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x