பங்களாதேஷில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ஷேக் ஹசீனாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஷேக் ஹசீனாவுக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பங்களாதேஷ் மக்களுக்கு ஷேக் ஹசீனா வழங்கிய சேவையும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட தலைமைத்துவமே இந்த மாபெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவுமிக்க இருதரப்பு உறவுகள் வலுப்பெற்றுள்ளதாக தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, எதிர்காலத்தில் இரு நாட்டு மக்களுக்கும் பரஸ்பர நன்மைகள் ஏற்படும் விதத்தில் அந்த உறவுகள் மேலும் விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஷேக் ஹசீனாவை விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு தனது வாழ்த்துச் செய்தியில் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி, இலங்கைக்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான அரசியல், பொருளாதார, கலாசார உறவுகளை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்புறவை வலுப்படுத்தவும் இந்த விஜயம் உதவும் எனவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் ஷேக் ஹசீனா மூலம் இலங்கைக்கு, பங்களாதேஷ் வழங்கிய தனித்துவமான உதவிகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஷேக் ஹசீனாவின் இலங்கை மற்றும் மக்கள் மீதான அக்கறை மற்றும் நல்லெண்ணத்தையும் பாராட்டினார்.
பங்களாதேஷ் மக்களின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்துக்காக உழைக்க பிரதமர் ஷேக் ஹசீனா சிறந்த ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவரது எதிர்கால முயற்சிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்