Monday, October 7, 2024
Home » இந்திய தமிழ் வம்சாவளியினர் மலையகத்தில் முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும்

இந்திய தமிழ் வம்சாவளியினர் மலையகத்தில் முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும்

- சென்னை உலக தமிழ் வம்சாவளி மாநாட்டில் இராதாகிருஸ்ணன் வேண்டுகோள்

by Prashahini
January 8, 2024 3:45 pm 0 comment

சர்வதேச மட்டத்தில் இருக்கின்ற தமிழ் வர்த்தகர்கள் இலங்கையின் மலையக பகுதிகளில் தங்களுடைய முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும். இதன் மூலமாக இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உங்களுடைய பங்களிப்பை செய்ய முடியும் முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளை செய்து கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் சென்னையில் நேற்று (07) உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக மாநாட்டின் நிறைவு நாளில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகின்ற பொழுதே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இம் மாநாட்டிற்கு உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் ஜே.செல்வகுமார் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவிக்கையில்,

இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்ற பொழுது அதனை மீள கட்டியெழுப்புவதற்கு அதிக பங்களிப்பை செய்த நாடு இந்தியா என்பதை யாரும் மறுக்க முடியாது. எனவே எங்களுடைய இந்திய வம்சாவளி தமிழர்கள் அனைத்து நாடுகளிலும் பரந்து வாழ்கின்றார்கள். அவர்களில் அநேகமானவர்கள் இன்று பொருளாதார ரீதியாக உயர்ந்த இடத்தில் இருக்கின்றார்கள். எனவே அவர்கள் அனைவரும் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வர வேண்டும்.

அப்படி முதலீடு செய்வதற்கு முன்வருகின்றவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன். குறிப்பாக இலங்கையின் மலையக பகுதிகளில் அதாவது அதிகமாக இந்திய வழிசாவளி தமிழர்கள் செரிந்து வாழுகின்ற பிரதேசங்களில் தங்களுடைய முதலீடுகளை செய்ய முன்வருவார்களானால் மக்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அது ஒரு உந்து சந்தியாக அமையும்.

இலங்கையை பொறுத்தளவில் மலையக இளைஞர் யுவதிகளுக்கு அனைத்து திறமைகளும் இருக்கின்றது. ஆனால் அவர்களுக்கு சந்தர்ப்பம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கின்றது. பொருளாதார ரீதியாக நாங்கள் பின்னடைந்தவர்களாகவே இருக்கின்றோம். எங்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இங்குள்ள அதாவது இந்த மாநாட்டில் பங்குபற்றியுள்ள முதலீட்டாளர்கள் முன்வருவார்களானால் அது இந்த மாநாட்டிற்கு கிடைத்த ஒரு வெற்றியாக நான் கருதுகின்றேன்.

உங்கள் அனைவரையும் இந்த மாநாட்டின் மூலமாக சந்தித்து இந்த வேண்டுகோளை விடுக்க வேண்டும் என்பதற்காகவே செல்வகுமாரின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்தேன். இந்த மாநாட்டை பொறுத்தளவில் இது காலத்தின் தேவையாகவே நான் கருதுகின்றேன். இன்று சர்வதேச மட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் தங்களுடைய சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக ஏதோ ஒரு வகையில் செயற்படுகின்றார்கள்.

ஒரு புறத்தில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றார்கள் அல்லது மறைமுகமாக உதவிகளை செய்கின்றார்கள். எனவே நாமும் எமது இந்திய வம்சாவளி தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு செல்வகுமார் எடுக்கின்ற இந்த முயற்சியை நான் வெகுவாக பாராட்டுகின்றேன். இது போன்ற ஒரு மாநாட்டை இலங்கையிலும் நடாத்துவதற்கு உலக தமிழ் வம்சாவளி அமைப்பு முன்வர வேண்டும். அதற்கான உதவிகளை செய்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x