ஐ.தே.கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
அத்துடன், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமெனவும், அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றிய போது,
“பல வருடங்களின் பின்னர் எமது நாட்டு கிறிஸ்தவ மக்கள், இந்த முறை நத்தார் தினத்தை கொண்டாடியுள்ளனர். கடந்த 03 வருடங்களாக பொருளாதார நெருக்கடி, உலகில் ஏற்பட்ட தொற்றுநோய் நிலைமை காரணமாக எமது நாட்டு மக்கள் மிகவும் அழுத்தத்துடனே இருந்தார்கள்.
இந்த அழுத்தம் இறுதியில் நாங்கள் வங்குராேத்து தேசமாக மாறினோம். வங்குராேத்து அடைந்த இந்த நாட்டை பொறுப்பேற்க யாரும் இல்லாத சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
எப்படியாவது ஒருவருடமும் 6 மாதங்களான போது, வங்குராேத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு முடிந்தது. இதேவேளை 2024 ஜனவரியில், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெய்க்கா நிறுவனம் உட்பட எமக்கு நன்கொடை வழங்கிய மற்றும் கடன் வழங்கிய குழுவினர் நிறுத்தியிருந்த அபிருத்தி வேலைத்திட்டங்கள் மீண்டும் இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தற்போது பிரதான விடயமாக இருப்பது ஜனாதிபதி தேர்தல் எப்போது நடத்துவதென்பதாகும்.
ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கப் போவதாக பலரும் தெரிவித்திருக்கின்றனர். எவ்வாறிருந்தாலும், இலங்கை மக்கள் இது தொடர்பாக மிகவும் சிந்தித்து செயற்பட வேண்டியுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்வரும் வேட்பாளர்களுக்கு நாடொன்றை நிர்வகிக்க முடியுமா, வேட்பாளர்களுக்கு உலகத் தலைவர்களை சமாளித்துக்கொண்டு இலங்கையை முன்னுக்கு கொண்டுசெல்ல முடியுமா என்பவை தொடர்பாக மக்கள் சிந்திக்க வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விகிக்ரமசிங்க கடந்த ஒரு வருடமும் 06 மாதங்களுக்குள் அமெரிக்க ஜனாதிபதி, சீன ஜனாதிபதி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் இந்தியப் பிரதமர் உள்ளிட்ட உலகில் பிரதான தலைவர்களின் கவனத்தை இலங்கையின்பால் செலுத்தியே இலங்கையை வங்குராேத்து நிலையிலிருந்து மீட்டு, முன்னோக்கிக் கொண்டுசெல்கிறார். உலகில் பல நாடுகள் வங்குராேத்து நிலையிலிருந்து இன்னும் மீள முடியாத நிலையிலிருக்கும் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது அனுபவம் மற்றும் ஆளுமை காரணமாக எமது நாட்டை வங்குராேத்து நிலையிலிருந்து மீட்டுள்ளார்” என்றார்.