கொவிட்-19 தொற்றுநோய் பரவல் காலத்தில் அறிவுறுத்தல்கள் வழங்குதல் மற்றும் நிதி சேகரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட itukama.lk என்ற ‘செய்கடமை’ அறக்கட்டளைக்கான இணையத்தளத்தை தொடர்ந்தும் பயன்படுத்தாமல் இருப்பதற்கு ஜனாதிபதி செயலகம் தீர்மானித்துள்ளது.
கொவிட் தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தியதன் பின்னர் இணையத்தளம் மூலம் நிதியத்திற்கு கிடைத்த நிதி தொடர்பிலான அறிக்கையை குறித்த இணையத்தளத்தின் முகப்பு பக்கத்தில் பதிவிட்ட நிலையில், 28.10.2020 ஆம் திகதி முதல் குறித்த இணையப் பக்கத்தின் செயற்பாடுகள் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது. அது தொடர்பான அறிவித்தல் மற்றும் நிதி தொடர்பிலான விடயங்கள் மாத்திரமே தற்போது அந்த இணையத்தின் முகப்புப் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டு வந்தது.
எனினும், தற்போது குறித்த இணையத்தளம் பயன்பாட்டில் இல்லை என்பதால் இணையப் பக்கத்தின் பெயரை வேறு தரப்பினர் தவறான வழியில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு காணப்படுவதால், அது தொடர்பில் அவதானமாக இருக்கும் பொருட்டு இந்த அறிவித்தலை ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ளது.