இலங்கை அணி கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட SSC விளையாட்டுக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ரி20 உலகக் கிண்ண தொடரின் போது பெண் ஒருவரை பாலியன் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, அந்நாட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டுக் கழகமான SSC அவர் மீது கிரிக்கெட் தடை விதித்திருந்தது.
இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதோடு, அவருக்கு எதிராக அவுஸ்திரேலிய பொலிஸார் நியாயமற்ற வகையில் நடந்து கொண்டதாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, தனுஷ்க குணதிலகவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் அவரை உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் விளையாட SSC கழகம் அனுமதி வழங்கியுள்ளது.
ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணையின் பின்னர், அவரது தடையை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக, தனுஷ்க அங்கத்துவம் வகிக்கும் SSC கழகத்தின் தலைவர் கிரிக்கெட் குழுத் தலைவர் சமந்த தொடன்வெல தெரிவித்தார்.
இதன்படி, SSC ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூர் தொடர்களில் விளையாட தனுஷ்க குணதிலக்கவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாளை (23) ஆரம்பமாகவுள்ள கழகங்களுக்கிடையிலான (Inter Club) ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தனுஷ்க குணதிலக்க இணைந்து கொள்ளவுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு; சுமார் ஒரு வருடத்தின் பின் தனுஷ்க நிபராதி என விடுதலை