Home » பாடசாலை தரங்களை 13 இலிருந்து 12 ஆகக் குறைக்க யோசனை

பாடசாலை தரங்களை 13 இலிருந்து 12 ஆகக் குறைக்க யோசனை

– தரம் 10 இல் O/L; தரம் 12 இல் A/L

by Rizwan Segu Mohideen
December 5, 2023 11:21 am 0 comment

– 17 வயதில் பாடசாலைக் கல்வி பூர்த்தி
– O/L பாடங்கள் 9 இலிருந்து 7
– தரம் 9, 10 இல் மேலதிக பாடங்கள் கட்டாயம்
– தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலை மட்ட மதிப்பீடு, பரீட்சையின் மதிப்பீட்டுடன் புள்ளிகள்; பரீட்சையின் போட்டித்தன்மையை குறைக்கவும் நடவடிக்கை

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக, உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 01ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர் (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த தலைமையில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2023ஆம் ஆண்டில் கல்வி அமைச்சின் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டின் முன்னேற்றங்கள் மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

அதன்படி, உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம், ஒவ்வொரு குழந்தையும் 17 ஆண்டுகளில் பாடசாலைப் படிப்பை முடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். நான்கு வயதில் முன்பள்ளியும், ஆரம்பப் பிரிவு 1 முதல் 5ஆம் தரம் வரையிலும், கனிஷ்ட பிரிவு தரம் 6 முதல் தரம் 8 வரையிலும், சிரேஷ்ட பிரிவு தரம் 9 முதல் தரம் 12 வரையிலும் வகைப்படுத்தப்படவிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குப் பாடசாலை அடிப்படையிலான மதிப்பீட்டிற்கு குறிப்பிட்ட சதவீதத்தையும், பரீட்சையின் ஊடாகக் குறிப்பிட்ட சதவீதத்தை வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்கி போட்டியை நீக்குவதற்கும் கல்வி அமைச்சு முன்மொழிந்துள்ளது.

மேலும், உத்தேச புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், 10ஆம் ஆண்டில் சாதாரணதரப் பரீட்சையையும், 12ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையையும் நடத்த கல்வி அமைச்சு முன்மொழிந்துள்ளது. சாதாரணதரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 9ல் இருந்து 7 ஆக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 7 பாடங்களில், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் (ICT), தொழில்நுட்ப மற்றும் துறைசார் திறன்கள், மத மற்றும் விழுமியங்கள் போன்ற புதிய மூன்று பாடங்களை மேலதிக பாடங்களாகக் கற்பது கட்டாயப்படுத்தப்படவிருப்பது பற்றிய முன்மொழிவும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

ஒரு வருடத்தில் எண்பதாயிரத்திற்கும் மேற்பட்ட (80,000) மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாததைச் சுட்டிக்காட்டிய கல்வி அமைச்சின் அதிகாரிகள், புதிய கல்விச் சீர்திருத்தத்தின் மூலம் எந்தவொரு பிள்ளையும் சித்தியடையாத நிலையில் இருக்கமாட்டார்கள் என்றும், சாதாரணதரப் பரீட்சைக்கு முகங்கொடுத்த சகல பிள்ளைகளும் தொழிற்பயிற்சிப் பாடநெறியைக் கற்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

அதற்காக உயர்தரப் பாடங்கள் கல்விப் படிப்பு, தொழில்சார் படிப்பு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாணவரும் பட்டம் பெறுவதற்கான பாதை தயார் செய்யப்பட்டுள்ளது. கல்விப் படிப்புக்களின் கீழ் தற்பொழுது காணப்படும் 6 பாடங்கள் 8 பாடங்களாக அதிகரிக்கப்பட்டு புதிய இரண்டு பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது. அத்துடன், நடைமுறைக் கற்கைகளின் கீழ் 10 பாடப்பிரிவுகள் மூலம் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதாகவும், அதன் மூலம் பட்டம் சாராத துறைகளில் சென்று பட்டம் பெறும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றக்கொள்வார்கள் என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

கல்விச் சேவையிலும் நிர்வாக மறுசீரமைப்பு இடம்பெற்று வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியது. தற்போதுள்ள கல்வி வலயங்களின் எண்ணிக்கை 100ல் இருந்து 122 ஆக அதிகரிக்கும் மற்றும் மொத்த எண்ணிக்கையான பத்தாயிரத்து நூற்று இருபத்தி ஆறு (10,126) பாடசாலைகள், ஆயிரத்து இருநூற்றி இருபது (1220) கொத்தணிப் பாடசாலைகளாக வகைப்படுத்தப்படும். தற்போதுள்ள அனைத்து தேசியப் பாடசாலைகளும் மாகாண மட்டத்தில் முதன்மைப் பாடசாலைகளாக கொத்தணிகளின் முதன்மைப் பாடசாலைகளாக இருக்கும்.

2024ஆம் ஆண்டுக்கான இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கு 517.05 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், பாடசாலை பாடப்புத்தகங்கள் வழங்குவதற்காக இரண்டாயிரம் மில்லியன் ரூபாவும், பாடசாலை சீருடைக்காக ஆறு மில்லியன் ரூபாவும், ஏழு இலட்சத்து இருபத்தி எட்டாயிரத்து நானூற்று எண்பது (728,480) பாடசாலை மாணவர்களுக்குக் காலணிகளை வழங்குவதற்கு இரண்டாயிரத்து ஐநூறு மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஏறத்தாள 1.07 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்குத் தற்போது மதிய உணவு வழங்கப்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் மாணவர்களுக்கு உணவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் கல்வித்துறை பேராசிரியர் குணபால நாணயக்கார மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x