Wednesday, February 21, 2024
Home » எழுத்துலகில் நீண்ட பயணம் செய்த செ. கணேசலிங்கன்

எழுத்துலகில் நீண்ட பயணம் செய்த செ. கணேசலிங்கன்

- ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடி

by Rizwan Segu Mohideen
December 3, 2023 6:06 am 0 comment

பெண்ணுரிமை, அடித்தட்டு மக்கள் வாழ்க்கை, சாதியாதிக்கம், சாதி ஒழிப்பு, சமத்துவம், வர்க்கப்போர், உலகமயமாக்கம், முதலாளித்துவம் போன்ற எல்லாவற்றைப் பற்றியும் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் எல்லாரிடமும் கொண்டு சென்றவரே செ.கணேசலிங்கன்.

ஈழத்தில் மார்க்சியப் பார்வையுடன் எழுத ஆரம்பித்தோரில் தரமான நாவல்களை தந்தவர்களில் அவரே தலைசிறந்தவர். நாவல், சிறுகதை ஆகிய ஆக்க இலக்கியத் துறைகளில் மட்டுமல்லாது சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் பெருமளவு எழுதி நூல்களை வெளியிட்டுள்ளார்.

ஈழத் தமிழ் மார்க்சிய எழுத்தாளர் செ.கணேசலிங்கன், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.

மார்க்சிய அறிஞர்கள் அன்டோனியோ கிராம்சி, லூயிஸ் அல்துசர் மற்றும் தியோடர் அடோர்னோ ஆகியோரின் எழுத்துக்களால் தாக்கம் பெற்ற கணேசலிங்கன் மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டவர். அவருடைய எழுத்துக்கள் மார்க்சிய தத்துவப் பார்வையுடன் இருந்தன.

யாழ்ப்பாணம், உரும்பிராயில் மார்ச் 9,1928- இல் பிறந்த கணேசலிங்கன், கல்விப் படிப்பை முடித்த பின்னர், இலங்கை அரசுப் பணியில் சேர்ந்தார். 1950 மற்றும் 1981-க்கு இடையில், திருகோணமலை மற்றும் கொழும்பில் பணியாற்றினார். பின்னர், அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

மாணவப் பருவத்திலேயே எழுதும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்ட செ. கணேசலிங்கனின் முதல் கதை 1950 இல் வெளியானது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவருடைய சிறுகதை தொகுப்பு எழுத்தாளர் மு.வ என்று அழைக்கப்பட்ட தமிழறிஞர் ெடாக்டர் மு. வரதராசனாரின் முன்னுரையுடன் வெளியிடப்பட்டது.

கணேசலிங்கனின் முதல் நாவலான நீண்ட பயணம் 1965 இல் வெளிவந்தது. சாதி ஒடுக்குமுறை பற்றி இந்த நாவல் பேசியது. அது அவருக்கு இலங்கை சாகித்திய மண்டலத்தின் விருதைப் பெற்றுத்தந்தது. அவர் 71 நாவல்கள், ஏழு சிறுகதைத் தொகுப்புகள், 22 கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் குழந்தைகள் இலக்கியம் பற்றிய எட்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவை மட்டுமில்லாமல் மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதியுள்ளார்.

குமரன் பதிப்பகத்தை ஆரம்பித்து அதன் மூலம் பெருமளவு தரமான நூல்களைப் பதிப்பித்துள்ளார். 1971இல் குமரன் என்ற மாத இதழை ஆரம்பித்து பொதுவுடமைக் கருத்துக்களுக்கான களமாக அதனை வெளியிட்டுள்ளார். 1971-83 வரை குமரன் பத்திரிகை இடதுசாரி-மார்க்சிய தத்துவத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது.

எழுத்துலகில் நீண்ட பயணம் செ. கணேசலிங்கன் எழுதிய முதல் புதினமாகும். இது ஈழத்துப் புதினங்களில் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. இதன் முதற் பதிப்பு 1965 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இவர் இரண்டாவதாக எழுதிய புதினம் சடங்கு, மூன்றாவதாக எழுதிய புதினம் செவ்வானம் 1967 இல் வெளியானது.

இம்மூன்று புதினங்களும் ஒரே குழுவைச் சேர்ந்த ஒரே பிராந்தியத்தை, யாழ்ப்பாணத்தைக் கதைக்களமாகக் கொண்ட புதினங்கள் என்றும் நிலமானிய அமைப்பில் இருந்து முதலாளித்துவ அமைப்புக்கு மாறும் சமுதாயத்தைச் சித்தரிக்கின்ற புதினங்களாக உள்ளன என்றும் பேராசிரியர் க. கைலாசபதி குறிப்பிடுகிறார்.

செ. கணேசலிங்கன் “குமரன்” இதழில் எழுதிய குமரனுக்கு எழுதிய கடிதங்கள் பலரினதும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் இது நூலாகவும் வெளிவந்தது.

1946 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி அதன் செயலாளராய் இருந்து தீவிரமாகச் செயல்பட்டவர். ‘சடங்கு’ எனும் நாவலில் தொடங்கி 2019 வரை நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியுள்ளார்.

‘நீண்டபயணம்’ நாவல் சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. ‘மரணத்தின் நிழலில்’ சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசைப் பெற்றது. தொ.மு.சி., மு.வ., அகிலன், திரு.வி.க போன்ற தமிழ் இலக்கிய எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகிய எழுத்தாள செ.கணேசலிஙன், மார்க்சிய சித்தாந்தத்தை அடிப்படையாய்க் கொண்டு படைப்புகளைப் படைத்தவர்.

இவரது புதினங்கள் 1980களில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அவருடைய ‘மரணத்தின் நிழல்’ நாவலுக்கு தமிழக அரசின் விருது அளிக்கப்பட்டது. சில நூல்கள் தடைசெய்யவும் பட்டன.

1987 மற்றும் 1999-க்கு இடையில் எழுதப்பட்ட அவரது பத்து நாவல்கள் இலங்கையில் தமிழ் இனப் பிரச்சினையைப் பேசியது.

எழுத்தாளர் செ.கணேசலிங்கன், அர்த்தசாஸ்திரத்தையும் மாக்கியவல்லியின் இளவரசன் நூலையும், பகத்கீதையையும் திருக்குறளையும் ஒப்பீடு செய்து ஆய்வு நூல் எழுதியுள்ளார். எழுத்தாளரும் கல்வியாளருமான எம்.ஏ.நுஹ்மான் எழுத்தாளர் செ.கணேசலிங்கன் கூறித்து கூறுகையில், “அவரது எழுத்துக்கள் பிரசாரத் தன்மை கொண்டவை என்று விமர்சகர்களில் ஒரு பகுதியினர் கூறினாலும், அரசியலை இலக்கியத்திலிருந்து விலக்க முடியாது என்று நான் கூறுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய முதல் நாவல் நீண்ட பயணம். 71 நாவல்கள், 7 சிறுகதைத் தொகுப்புகள், 22 கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். ஓர் அரசியலின் கதை, அன்னிய மனிதர்கள், அடைப்புகள், சடங்கு, போர்க் கோலம், மண்ணும் மக்களும், இரண்டாவது சாதி, கோடையும் பனியும் அவர் நாவல்களில் சில.

மான்விழிக்கு எழுதிய கடிதம், குந்தவிக்கு எழுதிய கடிதம், நல்லவன், சங்கமம், ஊமைகள், காதல் உறவல்ல பகைமை உறவு, ஒரே இனம், கொடுமைகள் தாமே அழிவதில்லை இவை செ.கணேசலிங்கன் சிறுகதைகளில் சில. பெண்ணடிமை தீர, கலையும் சமுதாயமும், அழகியலும் அறமும், பல்சுவைக் கட்டுரைகள் உள்ளிட்ட கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.

நவீனத்துவமும் தமிழகமும், பகவத் கீதையும் திருக்குறளும், கனவுகளின் விளக்கம், குறள் கூறும் பாலியல் கோட்பாடு, மாக்கியவல்லியும் வள்ளுவரும், பெண்ணியப் பார்வையில் திருக்குறள், சித்தர் சித்தாந்தமும் சூபிசமும், அர்த்த சாஸ்திரமும் திருக்குறளும்- முதலிய ஆய்வு நூல்களையும் தமிழுலகிற்குத் தந்துள்ளார். ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற சுயசரிதை நூலையும் எழுதியுள்ளார். சில பயணக் குறிப்புகள் -அமெரிக்கா, இங்கிலாந்து என்ற பயண நூலையும் எழுதியுள்ளார்.

ஈழத்து முற்போக்கு இலக்கிய முன்னோடியும், தமிழ் எழுத்துலகில் நீண்ட பயணம் செய்தவருமான செ.கணேசலிங்கன் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு (4.12.2021)

ஐங்கரன் விக்கினேஸ்வரா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT