Sunday, July 21, 2024
Home » காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை உறுதி செய்ய உலகம் ஒன்றுபட வேண்டும்

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை உறுதி செய்ய உலகம் ஒன்றுபட வேண்டும்

– சுற்றாடல் பாதிப்பை மட்டுப்படுத்தவும் இயற்கை தீர்வுகளுக்கும் பெருமளவான முதலீடுகள் அவசியம்

by Rizwan Segu Mohideen
December 2, 2023 10:42 am 0 comment

– ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் மாநாட்டிற்கு காலநிலை நீதி மன்றத்தை நிறுவுவதற்கான முன்மொழிவு
– வெப்ப வலயம் தொடர்பாக அறிக்கையிடுவதற்கு நிபுணர் குழு
– COP28 மாநாட்டில் ஜனாதிபதி வலியுறுத்தல்

காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தி பூமியின் இருப்பை உறுதி செய்யவதற்காக முழு உலகமும் ஒன்றுபட வேண்டும். அதற்காக தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளவதற்கான தயார் நிலைமையை இவ்வருடத்திற்கான COP28 மாநாட்டில் தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எதிரி கதவை அண்மித்து விட்டதால் ஒருபோதும் மேற்படி தீர்மானத்தை காலம் தாழ்த்த முடியாதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் 28 ஆவது காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான COP28 உயர்மட்ட மாநாடு 54 அரச தலைவர்களின் பங்கேற்புடன் நேற்று (01) டுபாய் எக்ஸ்போ சிட்டியில் ஆரம்பமானது. இந்த மாநாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐந்தாவது ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் மாநாட்டின் இணக்கபாட்டுக்கு அமைவாக, 2024 பெப்ரவரி 06 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் காலநிலை நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான யோசனையை இலங்கை முன்வைக்கவிருப்பதாகவும், அந்த நீதிமன்றம் ஊடாக காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமானதும் செயற்திறன் மிக்கதுமான தலையீடுகளை மேற்கொள்வதற்கான களத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

22 ஆவது நூற்றாண்டிர் வெப்ப வலயம் பூமத்திய ரேகையிலிருந்து விலகிச் செல்லக்கூடும் என விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ள நிலையில், மீள்புதுப்பிக்கதக்க வலுசக்திக்கு, சுற்றால் பாதிப்பு கட்டுப்பாடு மற்றும் இயற்கை தீர்வுகளுக்கான பெருமளவான முதலீடுகள் அவசியப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இலங்கை உட்பட ஏனைய பங்குதாரர்கள் வெப்ப வலய தொடர்பான அறிக்கையிடலுக்காக நிபுணத்துவ சபையொன்றை கூட்டுவதற்கு எதிர்பாப்பதாகவும், அதனூடாக வெப்ப வலயத்திற்கு மாத்திரமின்றி முழு துறைசார் திட்டமிடலொன்றை பகிர்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

COP28 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய முழுமையான உரை;

“COP28 ஒத்துழைப்பு வழங்கியமைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் மன்னருக்கும், அரசாங்கத்திற்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன்.

2023 ஆம் ஆண்டு ஐ.நா சுற்றாடல் வேலைத்திட்ட அறிக்கையில் குறித்த விடயம் “உடைக்கப்பட்ட வாக்குறுதிகள்” என்று எச்சரிக்கப்பட்டிருப்பதோடு, நூற்றாண்டின் இறுதியில் உலகின் வெப்பநிலை 3 செல்சியஸினால் அதிகரிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிதி, தொழில்நுட்பம் மற்றும் காலநிலைக்கான முதலீடுகள் தொடர்பிலான குறைந்தளவான செயற்பாடுகளின் விளைவாக, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பெரும் விளைவுகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்.

காலநிலை நிதியளித்த தொடர்பான உயர்மட்ட நிபுணத்துவ குழுவின் அறிக்கையில் காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு வருடத்திற்கு குறைந்தபட்டசம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாவது அவசியப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நிதியளிப்பதற்கான நியதிகளை செயற்படுத்துவதற்கான குழுவின் 2023 நவம்பர் 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் சுயாதீன பங்களிப்புக்களை மாத்திரம் பெற்றுத்தருமாறு கோரப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் இந்த நிதியம் அல்லது நிதியத்திற்கு பங்களிப்புச் செய்யும் தரப்பு தொடர்பிலான விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. அந்த அறிக்கையும் உலக கடன் சலுகை வழங்கல் தொடர்பிலான பிரச்சினையின் போது பதிலற்றதாக விளங்குகிறது.

எவ்வாறாயினும், அந்த அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து நான்கு நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட உலகளாவிய மதிப்பீட்டு தொடர்பிலான முதலாவது தொழில்நுட்ப கலந்துரையாடலுக்கான அறிக்கையில் இதற்காக வருடத்திற்கு குறைந்தபட்டசம் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முரண்பாடுகள் ஏற்படாமல் இருப்பதற்கான இணக்கப்பாடுகளை எட்டுவது இதற்கான தீர்வாக அமையாது. நாம் யாரை ஏமாற்ற போகிறோம்? காலநிலை நீதிகளை மறுக்கிறோம்.

ஐந்தாவது ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் மாநாட்டின் இணக்கபாட்டுக்கு அமைவாக, 2024 பெப்ரவரி 06 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் காலநிலை நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதற்கான யோசனையை இலங்கை முன்வைக்க இருக்கிறது. அந்த நீதிமன்றம் ஊடாக காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கான ஆக்கபூர்வமானதும் செயற்திறன் மிக்கதுமான தலையீடுகளை மேற்கொள்வதற்கான களத்தை உருவாக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கூறியது போல், வரி செலுத்துவோரின் பணம் வீணாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சிக்கலைத் தீர்க்க, “உலகளாவிய தீப்பிடிக்கும் காலம் வந்துவிட்டது.”

எதிரி நம் வாசலில் இருக்கிறான். நாங்கள் இன்னும் தள்ளிப்போடுகிறோம். எதிர்த்துப் போரிட படைகளை தயார்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

எனவே, அடுத்த இரு வாரங்கள் மிக முக்கியமானது. காலநிலை மாற்றத்தைத் தணிக்க தலைமைத்துவத்தை வழங்கும் திறன் நம்மிடம் உள்ளதா இல்லையா என்பதை அதன் மூலம் தீர்மானிக்க முடியும்.

புவி வெப்பமடைதலை 1.5 செல்சியஸியினால் குறைப்பதில் இலங்கை உறுதியாக உள்ளது.

பூமியின் 44% மேற்பரப்பில் 134 வெப்ப வலய நாடுகள் உள்ளன. 2030 களில் அந்த நாடுகளிலேயே உலகின் 50% மக்கள்தொகை காணப்படும்.

22 ஆம் நூற்றாண்டில் வெப்ப வலயம் பூமத்திய ரேகையிலிருந்து விலகிச் செல்லக்கூடும் என்று சில விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, சுற்றாடல் மாசடைவதைக் கட்டுப்படுத்தல் மற்றும் இயற்கை தீர்வுகளுக்கு பெருமளவான முதலீடுகள் தேவை.

எனவே, இலங்கை மற்றும் ஏனைய தரப்பினர் வெப்ப வலயம் தொடர்பான அறிக்கையிடலுக்கான நிபுணர் குழு ஒன்றை கூட்ட தீர்மானித்துள்ளனர். இது வெப்ப வலயத்திலும் மாத்திரமின்றி உலகம் முழுவதிலும் பல துறைசார் திட்டத்தை பகிர்ந்தளிக்க உள்ளது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தை சுற்றியுள்ள நாடுகள் சங்கத்தின் (IORA) தற்போதைய தலைவர் என்ற வகையில், இலங்கை இந்து சமுத்திரத்திற்கும் மற்றும் காலநிலை மாற்றத்துக்கும் இடையில் நிலவும் ஒன்றோடு ஒன்று சார்ந்திருத்தல் தன்மை தொடர்பில் கவனம் செலுத்துகிறது.

ஒரு பாதுகாப்பான கடல் மூலம் ஒட்சிசன் உற்பத்தி செய்யப்படுவதோடு, புவி வெப்பமடைதலால் உற்பத்தி செய்யப்படும் கார்பன் மற்றும் வெப்பம் அதன் ஊடாக உறிஞ்சப்படுகிறது. நிலப்பரப்பு, காடுகளுடன் ஒப்பிடும்போது, சதுப்புநிலங்கள் மற்றும் கடற்புற்கள் மூலம் அதிக கார்பன் உறிஞ்சப்படுகின்றன.

இருப்பினும், விரைவான காலநிலை மாற்றம் காரணமாக கடல் சூழல் மாறி வருவதுடன், இதனால் கடல் மட்டம் மற்றும் வெப்பநிலை உயர்கிறது. கடல் அமிலமயமாக்கல், பவளப்பாறைகள் அழிவு, கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடங்கள் அழிவு மற்றும் தீவிர வானிலை முறைகள் ஏற்படும்.

இந்த நிகழ்வுகள் மூலம் கடல் பல்லுயிர்தன்மை, கடல் சார்ந்த உணவு முறைகள் மற்றும் கடலோர வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதன் மூலம் நேரடியாக மனித உயிர்களை பாதிக்கிறது.

இந்து சமுத்திரத்தை எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பதற்காக நிலைபேறான, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் மக்களை மையமாகக் கொண்ட பசுமை பொருளாதாரத்தை உறுதிசெய்வதற்காக இந்து சமுத்திரத்திரப் பிராந்திய நாடுகளின் சங்கத்தின் உறுப்பு நாடுகள் மற்றும் பங்காளிகள், அர்பணிப்புடன் செயற்படுவார்கள்.

வெப்ப வலய மற்றும் இந்து சமுத்திரத்தின் ஒன்றிணைவானது கார்பன் வரிசைப்படுத்தலின் மிகப்பெரிய உலகளாவிய ஒன்றிணைவாக மாற்றப்படும்.

எனவே, இது தொடர்பாக பட்டப்பின்படிப்பு வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவ, COP27 மாநாட்டில் நான் முன்மொழிந்தேன்.

புவி வெப்பமடைதலை 1.5 செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு பங்களிக்கும் திறனை மேம்படுத்தல் மற்றும் ஆராய்ச்சியை முன்னெடுத்தல்.” போன்ற நோக்கங்களுக்காகவே காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம் (ICCU) நிறுவப்படவுள்ளது.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கெஹெலிய ரம்புக்வெல்ல, கஞ்சன விஜேசேகர, பாராளுமன்ற உறுப்பினர் மதுர வித்தான ஆகியோருடன் எதிர்கட்சி உறுப்பினர்களான சம்பிக்க ரணவக, அஜித் மான்னப்பெரும உட்பட காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சர்வதேச அலுவல்கள் தொடர்பான ஜனாதிபதியின் பணிப்பாளர் தினுக் கொலம்பகே, நிதி அமைச்சின் ஆலோசகர் தேஷால் டி மெல், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சாண்ரா பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT