போர் நிறுத்தத்தை ஏழாவது நாளாக நேற்று (30) ஒருநாளைக்கு நீடிப்பதற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே கடைசி நிமிடத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன்மூலம் போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்படுவதற்கும் மேலும் பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவதற்குமான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பமான போரில் காசா மீது இஸ்ரேல் ஏழு வாரங்கள் இடைவிடாது வான், தரை மற்றும் கடல் மார்க்கமாக சரமாரி தாக்குதல்களை நடத்தி பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ள சூழலில் போர் நிறுத்த காலத்தில் காசாவுக்கு மனிதாபிமான உதவிகளும் சென்று வருகின்றன. 2.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட காசாவில் மூன்றில் ஒரு பங்கினர் வீடுகளை இழந்துள்ளனர்.
எவ்வாறாயினும் ஜெரூசலத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு பிராந்தியத்தில் வன்முறையை அதிகரிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்தத்தை தக்கவைக்க நாளொன்றுக்கு குறைந்தது 10 பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்து வருகிறது. இந்நிலையில் நேற்றுக் காலை போர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நேற்று விடுவிக்கப்படுவோரின் பட்டியல் கடைசி நேரத்தில் வெளியிடப்பட்டது.
“பணயக்கைதிகளை விடுவிக்கும் மத்தியஸ்தர்களின் முயற்சி தொடர்வதால் போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிக்கப்படுகிறது” என்று இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது. போர் நிறுத்தம் காலாவதியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே இந்த அறிவிப்பு வெளியானது.
ஹமாஸ் அமைப்பு கடந்த புதனன்று 16 பணயக்கைதிகளை விடுவித்த நிலையில் அன்றைய தினத்தில் இஸ்ரேல் 30 பலஸ்தீன கைதிகளை விடுவித்தது. இதனைத் தொடர்ந்தே இந்தப் போர் ஏழாவது நாளைக்கு நீடிக்கப்பட்டது.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் போர் வெடித்தது தொடக்கம் 3 ஆவது முறையாக மத்திய கிழக்கிற்கான விஜயத்தை நேற்று ஆரம்பித்தார்.
“பணயக்கைதிகள் வீட்டிற்கு வருவதையும், அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைவதையும் கடந்த வாரத்தில் பார்த்தோம். அது இன்றும் தொடர வேண்டும்” என்று இஸ்ரேலிய ஜனாதிபதி இசாக் ஹெர்சொக்கை சந்தித்த பிலிங்கன் தெரிவித்தார்.
“காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்களுக்கு மிகவும் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கவும் இது உதவுகிறது. எனவே இந்த செயல்முறை தீர்வுகளை தருகின்றன. இது முக்கியமானது. இது தொடர முடியும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் தவிர்த்து இதுவரை 97 பணயக்கைதிகளை பலஸ்தீன போராளிகள் விடுவித்துள்ளனர். இதில் 70 இஸ்ரேலிய பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளனர். இஸ்ரேல் திரும்பும் ஒவ்வொரு பணயக்கைதிகளுக்காகவும் இஸ்ரேலிய சிறையில் இருக்கும் மூன்று பலஸ்தீன பெண்கள் மற்றும் பதின்ம வயதினர் விடுவிக்கப்படுகின்றனர். தவிர 27 வெளிநாட்டு பணயக்கைதிகள் அந்தந்த நாடுகளுடன் இடம்பெற்ற தனியான பேச்சுவார்த்தைகள் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஹமாஸ் போராளிகளின் பிடியில் தற்போது குறைவான இஸ்ரேலிய பெண்கள் மற்றும் சிறுவர்களே உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலிய படையினர் உட்பட இஸ்ரேலிய ஆண்களை விடுவிப்பதற்கு புதிய நிபந்தனைகளை விதிக்க ஹமாஸ் எதிர்பார்க்கிறது.
இந்நிலையில் கடைசி நிமிடத்தில் எட்டப்பட்ட போர் நிறுத்தமும் சண்டையை நிறுத்துவது மற்றும் காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்வது போன்ற அதே நிபந்தனையின் கீழ் செயற்படுவதாக கட்டார் வெளியறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்திருந்தார். போர் தரப்புகள் இடையே மத்தியஸ்தம் வகிப்பதில் எகிப்து மற்றும் அமெரிக்காவுடன் கட்டார் முக்கிய பங்கு ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏழு பெண்கள், சிறுவர்கள் மற்றும் மேலும் மூவரின் உடல்களை திரும்ப வழங்க முன்வந்தபோதும் அதனை இஸ்ரேல் மறுத்ததாக ஹமாஸ் முன்னதாக குறிப்பிட்டிருந்தது. இதில் காசா மீதான இஸ்ரேலின் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட பணயக்கைதிகளான 10 மாத கபிர் கிபாஸ் என்ற குழந்தை மற்றும் அந்தக் குழந்தையின் நான்கு வயது சகோதரர் மற்றும் தாய் ஆகியோரின் உடல்களையே வழங்க ஹமாஸ் முன்வந்தது. காசாவில் ஆட்சியில் உள்ள ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப்போவதாக சூளுரைத்தே அந்தப் பகுதி மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்தத் தாக்குதல்களில் காசாவில் 15,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 6,500 பேர் வரை காணாமல்போயினர். கொல்லப்பட்டவர்களில் சுமார் 40 வீதத்தினர் சிறுவர்களாவர்.
இஸ்ரேலின் உத்தரவை அடுத்து காசாவின் வடக்கில் இருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் தெற்கிற்கு இடம்பெயர்ந்த நிலையில் சனநெரிசல் மிக்க தற்காலிக முகாம்களில் தங்கி வருகின்றனர். ஏற்கனவே வடக்கு காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்து அந்தப் பகுதியில் பெரும் அழிவை ஏற்படுத்தி இருக்கும் இஸ்ரேல் போர் நிறுத்தம் முடிவுற்ற பின் தெற்கில் தனது போர் நடவடிக்கை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
ஒரு வாரமாக போர் நிறுத்தம் நீடித்தபோது காசாவில் உள்ள மக்கள் வெளியேற முடியாத நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர். குறிப்பாக வடக்கில் தாம் கைவிட்டுச் சென்ற விடுகளுக்குத் திரும்புவது மற்றும் இடிபாடுகளில் சிக்கி இருக்கும் தமது உறவினரை தேடுவதற்காக அந்தப் பகுதிக்கு திரும்புவதை இஸ்ரேல் இராணுவம் தடுத்து வருகிறது.
“வீட்டுக்குத் திரும்ப முடியாத போர் நிறுத்தத்தால் எண்ண பயன்? காசா நகரத்தில் குண்டுவீச்சு சத்தங்கள் கேட்ட பின், காசா நகரில் உள்ள எங்கள் வீடுகளைச் சரிபார்க்க நாங்கள் திரும்பிச் செல்ல முயன்றபோது, இஸ்ரேலிய டாங்கிகள் எம்மீது சூடு நடத்தியது” என்று 25 வயதான முஹமது ஜூத் தெரிவித்துள்ளார்.
வர்த்தக நிர்வாக பட்டதாரியான அவர் தெற்கு காசாவின் டெயிர் அல் பலாவில் இருந்து இதனைத் தெரிவத்தார்.
ஹமாஸ் ஆயுதப் பிரிவினர் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டு சுமார் 240 பேர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டதை அடுத்தே போர் வெடித்தது. அதேபோன்று காசாவில் தரைவழி தாக்குதலை ஆரம்பித்ததை அடுத்து 77 இஸ்ரேலிய துருப்புகள் அங்கு கொல்லப்பட்டன.