Tuesday, October 8, 2024
Home » ‘SPARKS’: யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் மாணவர் தூதுவர் திட்டத்தின் 10ஆவது பதிப்பு

‘SPARKS’: யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் மாணவர் தூதுவர் திட்டத்தின் 10ஆவது பதிப்பு

- இலங்கை இளைஞர்களை வலுவூட்டும் ஒரு தசாப்தத்தை கொண்டாடுகிறது

by Rizwan Segu Mohideen
November 29, 2023 11:19 am 0 comment

இளைய தலைமுறையினரை வலுவூட்டும் வகையில், யூனிலீவர் ஸ்ரீ லங்கா தனது 10ஆவது தொகுதி மாணவர்களைக் கொண்ட, ‘SPARKS’ மாணவர் தூதுவர்களை சமீபத்தில் இணைத்துக்கொண்டது. அதன் தாக்கம் மிக்க மற்றும் பலராலும் விரும்பப்படும் இந்த மாணவர் தூதுவர் திட்டத்திற்கு, 10 வெவ்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆர்வமுள்ள 26 இளங்கலை பயிலுனர் பட்டதாரிகளை நிறுவனம் இணைத்துள்ளது. SPARKS திட்டமானது, இலங்கை இளங்கலை பயிலுனர் பட்டதாரிகளின் தலைமைத்துவ திறன்களையும் அவர்களது புத்தாக்கமான உணர்வையும் வளர்ப்பதற்கு முயற்சி செய்கிறது. இது அவர்களது சகாக்கள் மத்தியில் சாதகமான செல்வாக்கு செலுத்துபவர்களாக அவர்கள் மாற ஊக்குவிக்கிறது. இது ஒரு தன்னார்வ மாணவர் தூதுவர் திட்டமாகும். இதில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளங்கலை பயிலுனர் பட்டதாரிகள், ஒரு வருட காலத்திற்கு அந்தந்த பல்கலைக்கழகங்களில் யூனிலீவரின் தூதுவர்களாக நியமிக்கப்படுவார்கள். யூனிலீவர் ஸ்ரீ லங்காவினால் 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டம் பின்னர் உலகம் முழுவதிலும் உள்ள யூனிலீவர் நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யூனிலீவர் ஸ்ரீ லங்காவின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஹாஜர் அலபிபி இது தொடர்பில் தெரிவிக்கையில், “இந்த வருடத்திற்கான SPARKS திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட திறமையான இளைஞர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். உள்ளூர் இளைஞர்களை மேம்படுத்துவதிலான எமது அர்ப்பணிப்புக்கு இந்த திட்டம் ஒரு சான்றாகும். இந்த ஒரு வருட நிகழ்ச்சித்திட்டமானது, யூனிலீவர் ஸ்ரீ லங்காவிற்கும் அந்தந்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில் தொடர்பாளர்களாகச் செயற்படும் மாணவர்களை தூதுவராக நியமிக்கிறது. மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகத்தில் தலைவர்களாக தங்கள் வலிமையை வெளிப்படுத்த அனுமதிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் இளங்கலைப் பயிலுனர் பட்டதாரிகளிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 55% SPARKS தூதுவர்கள் அண்மைய வருடங்களில் யூனிலீவர் நிறுவனத்தில் தொழில் பயிலுனராக (internships) அல்லது நிரந்தரப் பணியாளர்களாக மாறியுள்ளனர். அந்த வகையில் அதன் 10ஆவது வருடத்தைக் கொண்டாடும் இந்த வருடாந்த முயற்சியானது, இலங்கையிலுள்ள இளைஞர்கள் மீது நீடித்த சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை ‘எதிர்காலத்திற்கு பொருந்தும்’ வகையில் தயார்படுத்துவதற்கான யூனிலீவரின் நிலைபேறான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.” என்றார்.

SPARKS திட்டமானது, அதில் பங்கேற்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் அளவை கணிசமாக மேம்படுத்துகிறது. யூனிலீவர் நிறுவனத்தில் சாத்தியமான வேலை வாய்ப்புகளுக்கான விரைவான பாதையையும் அது வழங்குகிறது. யூனிலீவர் நிறுவனத்துடனான கூட்டுத் திட்டங்களின் மூலம், இந்த தன்னார்வத் திட்டமானது வேலைவாய்ப்பு திறன்களை வளர்த்து, இளங்கலைப் பயிலுனர் பட்டதாரிகளை தொழில்துறைக்கு வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், யூனிலீவருடன் இணைந்து அந்தந்த பல்கலைக்கழகங்களில் செயற்படுத்தும் திட்டங்களையும் வழங்குகிறது. களனிப் பல்கலைக்கழகம், NIBM, APIIT, கொழும்புப் பல்கலைக்கழகம், IIT, ருஹுணு பல்கலைக்கழகம், NSBM, மொரட்டுவை பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகிய 10 பல்கலைக்கழகங்கள் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு அகடமி ஆகியவற்றிலிருந்து 26 SPARKS தூதுவர்கள் அடங்கிய 10ஆவது தொகுதி மாணவர்கள் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த காவிந்தி குணவர்தன இது பற்றி தெரிவிக்கையில், “SPARKS திட்டம் எமக்கு விலைமதிப்பற்ற நிஜ உலக வெளிப்பாட்டை வழங்கியுள்ளதோடு, அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் ஒரே எண்ணம் கொண்ட மாணவர்களுடன் உறவுகளை கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கையை எமக்கு வழங்கியுள்ளது. பணியிடமொன்றிற்குள் நுழைவதற்கு முன்னரே எமது தொழில்முறை வலையமைப்பை விரிவுபடுத்த இது உதவும். இந்தத் திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டமைக்கும், எனது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் ஒரு புகழ்பெற்ற தனியார் துறை நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றக் கூடிய இந்தப் பொன்னான வாய்ப்பைப் பெற்றதற்கும் நான் பெருமைப்படுகிறேன்.” என்றார்.

விரிவான ஒரு வருட காலத்தை கொண்ட இத்திட்டத்தில், இளைஞர் மன்றத்திற்கான அணுகல், தொழிற்சாலைகள் மற்றும் சந்தைகளுக்குச் செல்வதற்கான வாய்ப்பு, நோக்கத்தைக் கண்டறிதல் மற்றும் தனிப்பட்ட வர்த்தகநாமங்களை மேம்படுத்தல் உள்ளிட்ட எண்ணிட முடியாத, வளமான பல்வேறு கற்றல் நடவடிக்கைகளில் ஆழ்ந்த கற்றல் அனுபவங்களில் இளங்கலைப் பயிலுனர் பட்டதாரிகள் இங்கு ஈடுபடுகின்றனர். முழுக்க முழுக்க SPARKS மாணவர் தூதுவர்களால் வழிநடத்தப்படும், யூனிலீவர் ஶ்ரீ லங்கா நிறுவனத்தின் தொழில்வழங்குனர் வர்த்தகக் குழுவின் ஆதரவுடன் இடம்பெறும், இலங்கையின் மிகப்பெரிய இளைஞர் மாநாடுகளில் ஒன்றான இளைஞர் மன்றம், SPARKS நிகழ்ச்சித் திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

1938ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனம் இலங்கையில், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. யூனிலீவர், கடந்த 85 ஆண்டுகளில் இலங்கை சமூகத்தில் ஆழமாக வேரூன்றி, உண்மையான இலங்கையரின் வாழ்க்கை முறையைப் பாதுகாத்து பேணி வருகிறது. SPARKS மாணவர் தூதுவர் திட்டம் போன்ற அதன் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு மேலதிகமாக, யூனிலீவர் ஸ்ரீ லங்கா இலங்கை இளைஞர்களுக்கு எதிர்காலத்திற்கு ஏற்ற திறன்களை வழங்குவதன் மூலம் அவர்களுக்கான வேலைவாய்ப்பை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டளவில் 100,000 இலங்கை இளைஞர்களை வலுவூட்டுவதை இலக்காகக் கொண்டு, இளைஞர்களை மேம்படுத்துவதற்கான யூனிலீவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பானது, அது தற்போது முன்னெடுத்துள்ள இளைஞர் அர்ப்பணிப்பின் மூலம் எடுத்துக்காட்டப்படுகிறது. எதிர்காலத்தின் மாறும் துறைகளில், தொழிற்துறை தரங்களை நிர்ணயித்து சமூக அபிவிருத்திக்கு யூனிலீவர் தொடர்ந்து பங்களித்து வருவதால், இலங்கையில் அதன் நீண்டகால பாரம்பரியத்தின் அடித்தளமாக, இளைஞர்களை மேம்படுத்துவதற்கும் அவர்களை வலுவூட்டுவதிலும் அதன் அசைக்க முடியாத கவனம் உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x