Sunday, September 8, 2024
Home » நஷ்டத்தில் ரூபவாஹினி, SLBC; பொது நிறுவனங்களாக மாற்றப்படும்

நஷ்டத்தில் ரூபவாஹினி, SLBC; பொது நிறுவனங்களாக மாற்றப்படும்

– வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
November 28, 2023 2:54 pm 0 comment

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனமும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் தொடர்ந்தும் நஷ்டத்தை ஈட்டும் நிறுவனங்களாகக் காணப்படுவதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரியவந்தது. குறித்த குழு அதன் தலைவர் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் அண்மையில் (23) கூடியபோதே இவ்விடயம் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

2015ஆம் ஆண்டு முதலான புள்ளிவிபரங்களை முன்வைத்து இந்த அலைவரிசைகள் எவ்வாறு நஷ்டம் அடைந்துள்ள நிலையைக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். இதற்கமைய இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் 2023ஆம் ஆண்டு 277 மில்லியன் ரூபாவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் 2023ஆம் ஆண்டில் 457 மில்லியன் ரூபா நஷ்டத்தை அடைந்திருப்பதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்தார். இந்த அலைவரிசைகளுக்குத் திறைசேரியிலிருந்து மேலும் நிதியை வழங்குவது கடினம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றைப் பொது நிறுவனங்களாக மாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இதற்கு அமைய இவ்விடயத்தில் மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்குக் குழுவொன்றை நியமிக்க அமைச்சரவை தீர்மானித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அரச ஊடகங்கள் போதிய விளம்பரங்களை வழங்குவதில்லை என குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய கட்டடங்கள், வீதிகள், பாலங்கள் போன்ற பல்வேறு விடயங்களால் பாதிக்கப்படும் மக்களின் சிரமங்களை ஊடகங்கள் ஒளிபரப்புவதுடன், அவற்றின் அபிவிருத்தியின் பின்னர் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் மக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென தலைவர் வலியுறுத்தினார்.

இங்கு, சமூக கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் ஊடகங்களின் பிரச்சார நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தயாரித்து குழுவிடம் வழங்குமாறு இலங்கை பத்திரிகை சபைக்குக் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான சாந்த பண்டார, டி.பி.ஹேரத், ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான வேலு குமார், (கலாநிதி) சரித ஹேரத், சஞ்ஜீவ எதிரிமான்ன, குணதிலக ராஜபக்ஷ, சுதத் மஞ்சுள உள்ளிட்டோரும், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x