இன்று (24) முதல் மழை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனிடையே, 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, மாத்தறை இரத்தினபுரி, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு அபாய எச்சரிக்கையே நீடிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென திணைக்களம் கூறியுள்ளது.
மண்சரிவு அபாயத்தினால் இரத்தினபுரி – வெலிகேபொல பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பனான, ஹப்புகஸ்தென்ன கிராமத்தில் 34 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கண்டி, ஹந்தானை – கலஹா வீதியின் ஹந்தானை விஹாரவத்த பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெலிமடை – யஹல ஹராவ ஊடாக உட புசல்லாவை – கோட்டகொட பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்தமையால், அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதியூடான வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதுடன், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையினால் கண்டி – அக்குரணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட அலவத்துகொட – ரம்புக்கெல பாடசாலை வீதியின் ஒரு பகுதி முற்றாக தாழிறங்கியுள்ளது.
இதனால் அப்பாதையூடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.