மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தின் இராகலை நகரில் டெல்மார் பிரதேசம் அமைந்துள்ளது. கல்வியில் காணப்பட்ட பின்னடைவு நிலையை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த ஊரில் கல்வி கற்று பல்கலைக்கழகம் மற்றும் கல்வியில் கல்லூரிகளுக்கு தெரிவான மாணவ மாணவிகளால் சேர்ந்து உருவாக்கப்பட்ட அமைப்பே வள்ளுவர் கல்வி அபிவிருத்தி மன்றம் ஆகும்.
வள்ளுவர் கல்வி அபிவிருத்தி மன்றமானது கடந்த 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பல பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. அவற்றில் ஒன்றாக டெல்மார் பிரதேசத்திற்கான திறன் வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது.
திறன் வகுப்பறையானது இங்குள்ள மாணவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதொன்றாகக் காணப்படுகிறது. இது மாணவர்களின் இணையவழி கற்றல் நடவடிக்கைகளுக்கும் மாணவர்களின் தேடல்களுக்கும் மிக பயனுடையதாகக் காணப்படும் என்ற நோக்கத்தோடு வள்ளுவர் திறன் வகுப்பறையும் வள்ளுவர் கல்வி அபிவிருத்தி மன்றத்தினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு வலப்பனை கல்வி வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் யோகராஜா விசேட அதிதியாக கலந்து கொண்டார்.
அவர் தமது பிரதம உரையில், “இந்த திறன் வகுப்பறையானது எமது பிரதேசத்திற்குக் கிடைத்த பெரும் உதவியாகும். இந்த வகுப்பறையைப் பயன்படுத்தி எமது மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்பதே எமது நோக்கம். இதற்கு உதவி செய்த Ratnam Foundation, Vision Global Empowerment, Mr W. Harichandran (USA) அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகட்டும்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இப்பாடசாலையின் அதிபர் நந்தகுமார் மற்றும் தோட்ட பொதுமக்கள், மன்றத்தின் ஏனைய உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.