மாத்தளை நக்கில்ஸ் மலை வனப்பகுதியினூடாக முன்னெடுக்கப்படவுள்ள அதிவலுக் கொண்ட மின் விநியோக நடவடிக்கை காரணமாக சுற்றாடலுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை தவிர்க்கும் வகையில் இப்பகுதியில் நிலத்தடி மின் விநியோகம் வழங்கப்படவுள்ளதாக, கெபெக் ஸ்ரீலங்கா சுற்றாடல் அமைப்பின் பணிப்பாளர் ஜெயதீஸ தெரிவித்தார்.
மாத்தளை மாவட்ட சுற்றாடல் கூட்டம் நேற்று முன்தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.
நக்கில்ஸ் மலை வனப்பகுதியினூடாக 33,000 வோல்ட் அதிவலுக் கொண்ட மின் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக மின்கம்பங்கள் நடுவதற்காக தோண்டப்படும் குழிகள் மற்றும் மின்கம்பிகளை இணைத்தல் போன்ற நடவடிக்கைகளால், அரியவகை மரங்கள், மூலிகைச் செடிகள் அழியும் நிலைமை உள்ளதுடன், மண்மேடுகள் சரிந்து விழும் அபாயமும் உள்ளது.
இவற்றை கருத்திற்கொண்டு மெதவத்த சுற்றுலா பிரதேசத்திலிருந்து நிலத்தடியினூடாக 2 கிலோமீற்றர் தூரத்துக்கு வனப்பிரதேசத்தில் மின் கேபிள்களை இணைத்து நிலத்தடி மின்சாரம் வழங்கவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
மாத்தளை சுழற்சி நிருபர்