இந்தியா சுதந்திரமடைந்ததையடுத்து நாடாளுமன்றத்தில் முதன் முதலாக ஒலித்த பாடலான ‘சாரேஜகான் சே அச்சா இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா’ எனும் பாடலின் கவிஞர்தான் அல்லாமா முஹம்மது இக்பால் ஆவார்.
ஓர் ஏழை தையல்காரரின் மகனாக இக்பால், 1871 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதி ஸியால் கோட்நகரில் பிறந்தார். அவர் பாடசாலைப் பருவத்திலேயே கவிதை எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இந்த ஆர்வமே பின்னால் உலகில் பிரசித்தி பெற்ற கவிஞராக உருவாவதற்கு காரணமாக இருந்தது. பாடசாலைப் பருவத்தில் கவிதை புனைவது மட்டுமன்றி கவிபாடுவதிலும் அதிக திறமை காட்டினார்.
இக்பால் மாணவராக இருந்த காலத்தில் பாடசாலைக்கு தாமதமாக சென்ற போது ஆசிரியர் அவரிடம் ‘நீ ஏன் தாமதமாக வந்தாய்?’ எனக் கேட்டபோது அதற்கு ‘இக்பால் எப்போதுமே தாமதமாகத் தான் வரும்’ என்று சொன்னார்.
இக்பால் என்றால் புகழ் என பொருள்படும். இக்பாலின் பதிலை வியந்து பாராட்டினார் ஆசிரியர்.
1894 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பின் பின்பு லாகூரில் இரு அரச கல்லூரிகளில் பேராசிரியராக கடமையாற்றியுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தில் ‘பொருளாதார கல்வி’என்ற நூலையும் எழுதினார். அவருக்கு மேற்படிப்பை தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்தது.
இங்கிலாந்து சென்று பரிஸ்டர் படிப்பிலும் தத்துவஞான ஆய்வுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின்னர் கலாநிதி பட்டமும் பெற்றார். இக்பால் மேற்படிப்பை முடித்தபின்னர் 1908 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியதும் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.
இஸ்லாமிய புத்திஜீவிகளின் இயக்கத்தில் இக்பால் இணைந்து சேவைகளில் ஈடுபட்டார். 1919ஆம் ஆண்டு இந்த இயக்கத்தில் பொதுச்செயலாளராகத் தெரிவானார்.
இலக்கிய உலகில் இக்பாலின் கவித்துவப் படைப்பு முழுஉலகையுமே அதிரவைத்தது. அவரது கவிதைகள் சமூகத்தின் எழுச்சி பிரளயமாகவே அமைந்தன.
அவர் தனது தொகுப்பாக அஸ்ராரேகுதி (இதயப் புதையல்) என்னும் நூலை 1915ஆம் ஆண்டில் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து மேலும் பல நூல்கள் வெளியிட்டார். உருது, பாரசீக மொழி, ஆங்கிலம், பிரெஞ்ச் போன்ற மொழிகளில் அவர் புலமை பெற்றிருந்தார்.
இக்பால் கவிஞர் மட்டுமல்ல மிகச்சிறந்த தத்துவஞானி, அரசியல் மேதை, வழக்கறிஞர், சிந்தனையாளர் ஆவார். அவர் தனது முதிர்ந்த சிந்தனையில் விளைந்த கருத்துக்களை கவிதை வடிவில் எழுதி மக்கள் மத்தியில் பரப்பினார். வெள்ளையர்கள் இந்திய நாட்டை அடிமைப்படுத்திய காலத்தில் தனது கவிதைகளால் மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கினார்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கும், அதிலிருந்து பாகிஸ்தான் தனிநாடு தோன்றுவதற்கும் இக்பால் எழுதிய கவிதைவரிகள் துணை புரிந்துள்ளன.
20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய மிகச்சிறந்த கவிஞர்களில் இக்பாலும் ஒருவர். அல்லாமா முஹம்மது இக்பால் அவர்கள் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தனது 65 ஆவது வயதில் லாகூரில் காலமானார்.
கலாபூஷணம் பரீட் இக்பால்
யாழ்ப்பாணம்