நேற்றையதினம் (06) நியமிக்கப்பட்ட அர்ஜுன தலைமையிலான இடைக்கால கிரிக்கெட் நிர்வாக குழுவினர், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தி, விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.
குறித்த மனு இன்றையதினம் (07) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகியோர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, விளையாட்டு அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, அமைச்சரினால் நியமிக்கப்பட்ட அர்ஜுன ரணதுங்க தலைமையிலான கிரிக்கெட் இடைக்கால நிர்வாக குழுவின் உறுப்பினர்கள் அந்தப் பதவிகளில் பணியாற்றுவதைத் தடுத்து மற்றுமொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
அத்துடன், மனுதாரர் மற்றும் இலங்கை கிரிக்கட் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில், விளையாட்டு அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் மற்றுமொரு இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே, நேற்றையதினம் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாக குழுவினர், கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து தற்போது வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.