முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு மயில்குஞ்சன் பகுதியில் இராணுவ வீரர் ஒருவரால் அவரது உறவினர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்குடியிருப்பில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்குடியிருப்பு கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்த 68 வயதுடைய தம்பிப்பிள்ளை மார்க்ண்டு எனும் சந்தேகநபரின் பெரிய தந்தையெ இவ்வாறு படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (28) இரவு 11.00 மணியளவில் மது அருந்தும் இடத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேப்பாபிலவு இராணுவ முகாமில் மெக்கானிக்கல் பகுதியில் கடமையாற்றும் 31 வயதுடைய மயில்குஞ்சன் குடியிருப்பினை சேர்ந்தவராலேயே குறித்த நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்தில் பணியாற்றும் குறித்த சந்தேகநபர் இராணுவத்தினரின் முகாமில் இருந்து அகற்றப்படும் இரும்புகளை விற்பனை செய்து வந்துள்ளார்கள். அதனால் ஏற்பட்ட பணப் பரிமாற்றம் தொடர்பிலான தகராறால் இவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது.
கொலைக்குற்றம் புரிந்த இராணுவத்தினை சேர்ந்த தமிழ் நபரும் தலையில் காயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலிஸ் பாதுகாப்பில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளில் குறித்த நபர் கஞ்சா பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிவான் க. பரஞ்சோதி சம்பவ இடத்திற்குச் சென்று நிலமையை பார்வையிட்டதுடன்இ இது தொடர்பான முழுமையான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலிஸ் பாதுகாப்பில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
(புதுக்குடியிருப்பு விசேட நிருபர், ஓமந்தை விஷேட நிருபர்)