Wednesday, October 9, 2024
Home » வட மாகாண மீன்பிடித் தொழிலுக்கென பிரத்தியேகமான முதலீட்டு வலயம் அமைக்கப்படும்

வட மாகாண மீன்பிடித் தொழிலுக்கென பிரத்தியேகமான முதலீட்டு வலயம் அமைக்கப்படும்

by Rizwan Segu Mohideen
October 18, 2023 6:06 pm 0 comment

வடமாகாணத்தில் மீன்பிடித் தொழிலுக்கு பிரத்தியேகமான முதலீட்டு வலயமொன்றை ஏற்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் மீன்பிடி தொழில் தொடர்பான முதலீடுகளை கொண்டுவர முடியும் எனவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

இதன் ஊடாக அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மீன்பிடித் தொழிலுக்கும் மட்டுமன்றி நுகர்வோருக்கும் பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் இடைத்தரகர்கள் குழுவொன்று முறையற்ற இலாபம் ஈட்டும் மீன்பிடி மாபியாவை முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (18) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் கூறியதாவது:

கடந்த காலங்களில், மீன்பிடிக் கூட்டுத்தாபனம் நேரடியாக சட்ட முறைகளின் கீழ் மீன்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்ததன் ஊடாக அதிக லாபம் ஈட்டி வருகிறது.

ஆனால் மீன்பிடித்துறையில் காணப்படும் ஏகபோக உரிமையை உடைப்பது எளிதான காரியம் அல்ல. எங்கள் பணிகளைக் குழப்ப அவர்கள் நிறைய முயற்சி செய்தனர். கூட்டுத்தாபனத்தில் இருந்தும் அதற்கு ஆதரவு இருப்பதாக அறியக்கிடைத்தது. அந்த சூழ்நிலையால், மீனவர்கள், நுகர்வோர் மற்றும் கூட்டுத்தாபனத்திற்கு பெரும் நட்டம் ஏற்பட்டது. எனவே, சவால்களுக்கு மத்தியிலும் அந்த மாபியாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

விநியோகஸ்தர்களிடமிருந்து ஒரு கிலோ மீன் ரூ. 1750க்கு கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் நேரடியாக இறக்குமதி செய்யும்போது ஒரு கிலோ 1250 ரூபாய்க்கு வாங்கலாம். கூட்டுத்தாபனத்தின் மாதாந்த மீன் தேவை 50,000 டொன்களை விட அதிகமாகவுள்ளது. இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் கூட்டுத்தாபனம் நட்டத்தையே சந்திக்க நேரிடுகிறது.

அத்துடன், வடமாகாணத்தில் மீன்பிடித் தொழிலுக்கு பிரத்தியேகமான முதலீட்டு வலயமொன்றை நிறுவுவதற்கான ஏற்பாடும் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. அதன் மூலம் மீன்பிடித் தொழில் தொடர்பான முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவந்து பெருமளவிலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும்.

அத்துடன் இவ்வருட உலக மீனவர் தினத்துடன் இணைந்ததாக நவம்பர் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வடமாகாணத்தை மையமாக வைத்து யாழ்.மாவட்டத்தை மையமாக வைத்து வடக்கில் பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நடமாடும் சேவை , மீன்பிடி அடையாள அட்டை வழங்கல், மீன்பிடி படகுகளை பதிவு செய்தல், மீன்பிடி சமிக்ஞைகளின் தொடர்பாடல் பிரச்சினைகளை தீர்ப்பது உட்பட கடற்றொழில் அமைச்சுடன் தொடர்புள்ள அனைத்து நிறுவனங்களினாலும் வழங்கப்படும் அனைத்து சேவைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு தீர்வுகள் வழங்கப்படும்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் நாரா நிறுவனத்தின் பரிசோதனை நிலையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் குறிப்பாக இரணைமடு நீர்த்தேக்கம் உள்ளிட்ட ஆறுகள் மற்றும் ஏரிகளில் மீன்குஞ்சுகள் இடப்படும். மேலும், நன்னீர் மீன்பிடித் தொழிலை ஊக்குவிப்பதற்காக, சுமார் 54 மில்லியன் மீன் குஞ்சுகள் நாடு முழுவதும் உள்ள நன்னீர் தேக்கங்களில் இடப்பட்டுள்ளன.

சீன அரசின் உதவியுடன் ஒருநாள் மீன்பிடி படகுகளுக்கு மண்ணெண்ணெய் மானியம் வழங்கும் திட்டம் இரண்டாவது முறையாக செயல்படுத்தப்படுகிறது. ஒரு மீனவருக்கு 153 லீட்டர் மண்ணெண்ணெய் வீதம் 28,000 மீனவர்களுக்கு 4,250,000 லீட்டர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x