Home » இலங்கையை துரித பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச்செல்வேன்

இலங்கையை துரித பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச்செல்வேன்

- இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் (SLIIT) கண்டி கிளையை திறந்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு.

by Rizwan Segu Mohideen
October 11, 2023 7:28 am 0 comment

இலங்கையின் பூகோள ரீதியான அமைவிடமும் மனித வளமும் மட்டுமே பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கான ஒரே வழி என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டை கட்டியெழுப்புவதற்கு மனித வளத்தை அதிகபட்சமாக பயன்படுத்துவதே முக்கிய நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.

சிங்கப்பூர், ஹொங்கொங் போன்ற நாடுகள் மனிதவளத்தை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகத்தின் (SLIIT) கண்டி கிளையை நேற்று முன்தினம் (09) பிற்பகல் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஏழு மாடிகளைக் கொண்ட இந்த தனியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வக வசதிகள், மாநாட்டு அரங்கு , ஆராய்ச்சி கூடங்கள் மற்றும் விடுதி வசதிகள் உள்ளன.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, பல்கலைக்கழகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, பின்னர் பல்கலைக்கழக வளாகத்திற்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டதுடன் மாணவர்களுடன் உரையாடலில் ஈடுபட்டார்.

அவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, மாணவர்களின் திறமைகளையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், வேகமாக வளர்ந்து வரும், அதிக போட்டித்தன்மை கொண்ட, தொழில்நுட்ப அடிப்படையிலான பொருளாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பசுமைப் பொருளாதாரம் என்பனவே இலங்கையின் எதிர்கால வேலைத்திட்டம் என்றார்.

இலங்கையில் பல்கலைக்கழக அமைப்பை நவீனமயமாக்கும் அதே வேளையில், தேவையான தொழில்நுட்ப அறிவைக் கொண்ட பட்டதாரிகளை உருவாக்கும் வகையில், புதிய அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

இன்று உலகில் தொழில்நுட்ப புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த தொழில்நுட்ப புரட்சியின் பெரும் பகுதி மேற்கத்திய நாடுகளுக்கு சொந்தமானது. ஒரு சிறிய பகுதி அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு சொந்தமானது. அதிலிருந்து சீனாவை நீக்கினால், அந்த எண்ணிக்கை இன்னும் குறையும்.

1977ஆம் ஆண்டு ஆடைத் தொழிலைக் கொண்டு இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப ஆரம்பித்தோம். இன்று ஆடைத் தொழிலை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.

இப்போது நமது எதிர்காலம் தொழில்நுட்பம் சார்ந்த கைத்தொழில்துறையிலே உள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த விவசாயத் துறை மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான சேவை முறை ஆகிய இலக்கை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

கடன் மீட்சிச் திட்டம் முடிவடைந்த பின்னர் அரசாங்கத்தின் எதிர்காலப் பயணம் குறித்து அறிவிக்க எதிர்பார்க்கிறோம். முதலில், வேகமாக வளர்ந்து வரும், அதிக போட்டித்தன்மை கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரத்தை நாம் உருவாக்க வேண்டும். இரண்டாவதாக, டிஜிட்டல் முறைமை அடிப்படையிலான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும், மூன்றாவதாக, பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்.

இன்று இலங்கை பசுமைப் பொருளாதாரத் திட்டங்களுக்குள் பிரவேசித்துள்ளதுடன் அதற்கான பரந்தளவிலான பணிகளை முன்னெடுத்துள்ளது .

இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல நமக்கு புதிய கல்வி முறையும் அறிவும் தேவை. அதற்கு, தற்போதுள்ள பல்கலைகளை நவீனமயமாக்கி, புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் துறையின் பங்களிப்புடன் இந்தப் பல்கலைக்கழகங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு இலாபத்தை மீள முதலீடு செய்யும் முறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், லாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் பல்கலைக்கழகங்களை நிறுவ முடியும்.

இந்த பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை முடிப்பதற்காக மாணவர்களுக்கு மானிய வட்டியுடன் கடன் வழங்கும் திட்டத்தையும் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

தற்போது அரசாங்கத்துடன் தொர்பற்ற துறைகளில் இருந்து பல பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ பீடங்களை ஆரம்பிக்கும் திட்டம் உள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும். புதிய பல்கலைக்கழகங்களை அரசாங்கத்தின் ஊடாக தொடங்க எதிர்பார்க்கப்படுகிறது. குருநாகல், சீதாவக்க மற்றும் ஏனைய பிரதேசங்களிலும் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது இரண்டு வளாகங்களை உள்ளடக்கியது. அதற்கான திட்டங்கள் இந்த ஆண்டே தயாரிக்கப்பட்டு முடிக்கப்படும் .

இப்பணிகளை நடைமுறைப்படுத்தும் அதேவேளை கண்டி தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கைப் பல்கலைக்கழகம் இந்தக் கண்டிப் பகுதியில்தான் நிறுவப்பட்டது. ஆனால் அதன் இன்றைய நிலை குறித்து மகிழ்ச்சியடைய முடியாது.

அப்போது ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக விளங்கிய இலங்கைப் பல்கலைக்கழகம், முதல் மூன்று நான்கு தசாப்தங்களில் நாட்டின் சுதந்திரத்தை முன்னேற்றுவதற்கு பரந்த பங்களிப்பைச் செய்தது. எனவே இந்த பல்கலைக்கழகத்தை மீண்டும் அபிவிருத்தி செய்ய வேண்டும்.

மேலும், கண்டியில் சென்னை IIT வளாகம் ஆரம்பிப்பது குறித்து இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளேன். பின்னர், அதனை தனியான பல்கலைக் கழகமாக மாற்றலாம். அத்துடன், கொத்மலை பிரதேசத்தில் காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொல்கொல்ல பிரதேசத்தில் மற்றுமொரு பல்கலைக்கழகத்தை ஆரம்பிப்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த வேலைத்திட்டங்களினால் கண்டி தொழில்நுட்ப மையமாக மாறும் என்றே கூற வேண்டும். மேலும், தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு பதிலாக தொழிற்கல்லூரிகளை நிறுவ திட்டமிட்டுள்ளோம். பட்டதாரிகள் மட்டுமின்றி, அனைத்து துறைகளுக்கும் உள்ள பணியாளர்கள் தேவை. அந்த வளர்ச்சியுடன் நாம் முன்னேற வேண்டும்.

புவியியல் அமைவிடம் மற்றும் மனித வளம் என்பவற்றில் மட்டுமே நாம் பொருளாதார ரீதியாக தனித்துவம் பெற்றுள்ளோம். எங்களிடம் வேறு எதுவும் இல்லை. சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற நாடுகள் மனித வளத்தினால் முன்னேறின. எம்மால் ஏன் மனித வளத்தில் முன்னேற முடியாது?

பசுமைப் பொருளாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பப் பொருளாதாரத்துடன் நாம் முன்னேற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குத் தேவையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்கப்படுகிறது. இதையெல்லாம் அரசாங்கத்தினால் மட்டும் செய்ய முடியாது. இன்று இந்த நடவடிக்கைகளுக்கு பங்களித்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த மாணவர்களின் திறமைகளை பார்க்கும் போது நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக கட்டியெழுப்ப முடியும் என்பது புலனாகிறது. இங்கு மட்டுமன்றி மொரட்டுவ, பேராதனை, யாழ்ப்பாணம் போன்ற பொறியியல் தொழிநுட்ப நிறுவனங்களின் விஞ்ஞான மாணவர்கள் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். அந்தத் திறமைகளுடன் நாம் முன்னேற வேண்டும்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி பிரதேசத்தை தொழில்நுட்ப மையமாக மாற்ற முடியும். அத்துடன், கண்டியை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி குறித்தும் நாம் இப்போது கலந்துரையாடி வருகின்றோம். நமது நாட்டின் தலைநகராகவும் கலாச்சாரத்தின் முக்கிய நகரமாகவும் விளங்கிய இந்த வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக உயிரோட்டமுள்ளதாக மாற்றுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே, சுகாதார இராஜாங்க அமைச்சர் டொக்டர் சீதா அரம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, டொக்டர் ராஜித சேனாரத்ன, ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, சரத் அமுனுகம, SLIIT தனியார் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் தலைவருமான பேராசிரியர் லக்ஷ்மன் ரத்நாயக்க, உபவேந்தர் பேராசிரியர் லலித் கமகே மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x