– இலங்கை போன்ற நாடுகளுக்கு நீண்ட கால மறைமுக தாக்கம்
இஸ்ரேலிய நெருக்கடி தொடர்பிலும் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருவதாகவும், இஸ்ரேல், பலஸ்தீனம் ஆகிய இரு நாட்டுக் கொள்கைகளையும் இலங்கை எப்போதும் ஆதரித்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (09) அமைச்சரவைக்கு அறிவித்தார்.
அமைச்சரவைக்கு விசேட அறிவிப்பொன்றை முன்வைத்த ஜனாதிபதி, இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்தார்.
இஸ்ரேலில் பல இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். வெளிவிவகார அமைச்சு அவர்களை சரியான இடங்களுக்கு அனுப்பி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலான இஸ்ரேலியர்கள் சுற்றுலாப் பயணிகளாகவும் பல்வேறு பணியாளர்களாகவும் உள்ளனர். அவர்கள் இஸ்ரேலுக்குத் திரும்புவதற்கு நாம் உதவ வேண்டும். இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்கள் குறித்து தேடிப் பார்க்குமாறு பொலிஸ் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளேன்.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் எனும் இரு நாட்டுக் கொள்கையை இலங்கை எப்போதும் ஆதரித்து வருகிறது. அதற்கு நாம் நிச்சயம் ஆதரவு வழங்குவோம். சில சமயங்களில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை நாம் கண்டித்திருக்கிறோம். இருப்பினும், இவை அனைத்தும் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தாது. முன்னெப்போதும் இல்லாத இந்தத் தாக்குதலை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
மோதல்கள் மற்றும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆபிரிக்க ஒன்றியம் கொண்டு வந்த பிரேரணைக்கு இலங்கை இணக்கம் தெரிவிக்கிறது.
இந்த நெருக்கடியினால் மற்றொரு பாதிப்பும் ஏற்படும். ஒரு பீப்பாய் பெற்றோலின் விலை 100 டொலர் வரை உயரும் என்று எதிர்பார்க்கலாம். அதன் பிறகு பெப்ரவரி இறுதியில் இருந்து மீண்டும் விலை குறையும்.
இந்த நெருக்கடியானது எரிபொருளுக்கு மேலும் பற்றாக்குறையை ஏற்படுத்தும். இதன் விளைவாக எரிபொருளின் விலை நீண்ட காலத்திற்கு உயர்ந்திருக்கும். இது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.