சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், லாச்சென் பள்ளத்தாக்கில் கடந்த 4ஆம் திகதி ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பலத்த மழை கொட்டியது. இதனால், டீஸ்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சுங்தாங் அணை உடைந்து, மங்கன், கேங்டாக், நாம்சி, பாக்யாலங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கின. 14 பாலங்கள், 10க இற்கும் மேற்பட்ட சாலைகள் கடுமையாக சேதம் அடைந்தன. இதில் 23 இராணுவ வீரர்கள், 43 இராணுவ வாகனங்கள் மற்றும் 200 இற்கும் மேற்பட்டோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
மேலும், 9 இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. காணாமற்போனோரை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், 140 பேரை காணவில்லை என்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே வடக்கு சிக்கிம் மலைப்பகுதியில் ஒரு வாரமாக சிக்கி தவித்த 56 பேரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கயிறு மூலம் மீட்டனர். ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மேடான மலைப்பகுதியில் குழுவாக தங்கி இருந்ததாகவும், வெளியேற வழியில்லாததால் கடும் சிரமங்களை சந்தித்ததாகவும் மீட்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். சுமார் 1,700 சுற்றுலா பயணிகள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பாதிப்பால் ஏராளமான வீடுகள் சேறு நிறைந்த மண்குவியல்களாக காட்சி அளிக்கின்றன.
திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது