வாகன விபத்தில் சிக்கி கடந்த 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஜெக்சன் அந்தனி இன்று (09) அதிகாலை காலமானதாக அரது குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர்.
1958 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி பிறந்த நடிகர் ஜெக்சன் அந்தனி தனது 65 ஆவது வயதில் காலமானார்.
அனுராதபுரம் பகுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, தலாவ வீதியில் மொரகொட பிரதேசத்தில் அவர் பயணித்த வாகனம் யானை மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த ஜெக்சன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சுமார் 14 மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெக்சன் இன்று அதிகாலை உயிரிழந்ததாக குடும்பத்தினரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
நடிகராகவும், பாடலாசிரியராகவும், பாடகராகவும், எழுத்தாளராகவும், அறிவிப்பாளராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்திய அவர் இந்நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் செயற்பட்டுள்ளார்.
தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இலங்கைத் திரையுலகில் இது பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.