ஒக்டோபர் மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ள மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக மின்சாரக் கட்டண திருத்தம் மேற்கொள்வதற்காக இலங்கை மின்சார சபை இரண்டு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர்
மஞ்சுள பெனாண்டோ தெரிவித்தார்.
ஏற்கனவே உள்ள கட்டணம் மற்றும் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணத் திருத்தம்
CEB-tariff-proposal-dated-Sep-27-2023-New-and-Old-1எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ள கட்டண திருத்தத்திற்கு பதிலாக, அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இலங்கை மின்சார சபையினால் இந்த விசேட கட்டண திருத்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்:
“மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கை ஆலோசனைக்கு அமைய, ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கான முன்மொழிவுகளை இ.மி.ச முன்வைக்கலாம். அதற்கமைய எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையிலேயே கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியும்.
எவ்வாறாயினும், இலங்கை மின்சார சபையின் நிதி நிலைமை, மின்சார உற்பத்தி மற்றும் மின்சாரத்திற்கான கேள்வி ஆகியவை முன்னறிவிக்கப்பட்ட நிபந்தனைகளிலிருந்து வேறுபட்டுள்ளமையால் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், ஜனவரி மாதத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த கட்டண திருத்தத்தை முன்னோக்கி கொண்டுவருவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மீண்டும் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படாது என குறிப்பிட வேண்டும். இவ்வாண்டில் 31 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என இ.மி.ச. மதிப்பிட்டுள்ளது.”
அத்துடன், இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட 4,500 ஜிகாவாட் மணிநேர நீர் மின் உற்பத்திக்கு பதிலாக, 3,750 ஜிகாவாட் மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என இ.மி.ச-இன் முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது .
மேலும், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் எதிர்பாராத செயலிழப்பு காரணமாக அந்த மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி எதிர்பார்த்ததை விட குறைவாகவே காணப்படுவதாகவும் இ.மி.ச.யின் கட்டண திருத்த முன்மொழிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீர்மின்சாரம் குறைபாட்டால் அவசர மின்சார கொள்வனவிற்கான தேவை காணப்படுகின்றமையும் கட்டண திருத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த ஆண்டுக்கான தினசரி கேள்வி 44.4 ஜிகாவாட் மணிநேரமாக அதிகரிக்கும் என்றும் இ.மி.ச எதிர்பார்க்கிறது. இந்தக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டே, இ.மி.ச இந்த விசேட கட்டணத் திருத்தத்தை முன்மொழிந்துள்ளது.
கட்டணத்தை அதிகரிப்பதற்காக இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள முன்மொழிவு தொடர்பான மேலதிக தகவல்கள் குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் கூறுகையில்,
“எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அனைத்து பயனாளர்களுக்குமான மின்சார கட்டணத்தை 22 வீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்பது இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள முன்மொழிவுகளில் ஒன்றாகும். ஒரு மின்சார அலகினை 8 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்பதே மற்றைய முன்மொழிவாகும். இந்த முன்மொழிவுகள் மற்றும் அவற்றின் அடிப்படையிலான செலவுத் தரவுகளை ஆய்வு செய்து மதிப்பாய்வு செய்வது மற்றும் கட்டண முறையுடன் தரவு எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதை சரிபார்ப்பது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.
பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை விரிவாக பரிசீலித்த பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும்” என்றார்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டம் மற்றும் இலங்கை மின்சார சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமையவே கட்டண முன்மொழிவ் தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இலங்கை மின்சார சட்டத்தின் 30வது பிரிவின்படி, கட்டண திருத்தத்தின் போது பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு செவிசாய்க்க வேண்டும். இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் 17வது பிரிவும் பொதுமக்கள் கருத்து கேட்டலின் அவசியம் குறிப்பிட்பட்டுள்ளது.
அதற்கமைய, உத்தேச கட்டண திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெற ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களும் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம்.
மேலும், பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை ஒக்டோபர் 18ஆம் திகதி வாய்மொழியாக தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கை கடிதம்
CEB-tariff-proposal-dated-Sep-27-2023-Letter-1