சீனாவின் ஹான்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டப் போட்டியில் ஆண்களுக்கான 50 மீற்றர் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் மத்தியு அபேசிங்க இலங்கையின் தேசிய சாதனையை முறியடித்தார்.
நேற்று (28) நடந்த இந்தப் போட்டியின் ஆரம்ப சுற்றில் பங்கேற்ற அபேசிங்க போட்டித் தூரத்தை 24.58 விநாடிகளில் பூர்த்தி செய்து இந்த சாதனையை படைத்தார். எனினும் இந்தப் போட்டியில் அவர் 6 ஆவது இடத்தையே பிடித்தார்.
இதன்போது கடந்த ஆண்டு பொதுநலவாய போட்டியில் அகலங்க பீரிஸ் 24.89 விநாடிகளில் போட்டியை நிறைவுசெய்த தேசிய சாதனையையே அபேசிங்க முறியடித்தார்.
இந்தப் போட்டியில் 3 ஆவது ஆரம்ப சுற்றுப் போட்டியில் அகலங்க பீரிஸ் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 24.91 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்த அவர் 8 வீரர்களில் 7 ஆவது இடத்தையே பிடித்தார்.
இதன்படி 40 ஒட்டுமொத்த வீரர்களில் அபேசிங்க 18 ஆவது இடத்தையும் அகலங்க பீரிஸ் 22 ஆவது இடத்தையும் பிடித்ததால் பதக்க வாய்ப்பை இழந்தனர்.
இதேவேளை நேற்று ஈ ஸ்போர்ட்ஸ் விளையாட்டில் இணைந்த இலங்கை அணி பஸ் எலிட் பி பிரிவில் ஆரம்ப சுற்றில் போட்டியிட்டு நான்கு அணிகளில் சீன தைபே அணிக்கு மாத்திரம் பின்தங்கியது. தைபே அணி 48:21.048 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்ததோடு போட்டியை நிறைவு செய்ய இலங்கை அணிக்கு 57:33.253 நிமிடங்கள் தேவைப்பட்டன.
ஈ ஸ்போர்ட்ஸ் போட்டியில் இலங்கை அணி ஆரம்ப சுற்றில் இன்று மேலும் இரு போட்டிகளில் பங்கேற்கவுள்ளதோடு, ஆரம்ப சுற்று முடிவில் குறைந்த காலத்தை பதிவு செய்யும் 4 அணிகள் 8 அணிகள் பிரிவுக்கு தகுதி பெறும்.
குத்துச்சண்டை போட்டியில் நேற்று 63.5–71 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட நிராஜ் விஜேவர்தன சீன தைபே வீரர் செய் வெய் இடம் 5–0 என தோல்வியை சந்தித்தார். நிராஜ் எதிராளிக்கு கடும் போட்டியை கொடுத்தபோதும் ஐந்து சுற்றுகளிலும் முன்னிலை பெற தைபே வீரரால் முடிந்தது. இந்த தோல்வியுடன் இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் இலங்கையின் போட்டிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளன.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்றைய தினத்தில் இலங்கையின் பதக்க எதிர்பார்ப்பான மெய்வல்லுனர் போட்டிகள் ஆரம்பமாகின்றன. இதில் இலங்கை வீர, வீராங்கனைகளான நதீஷா ராமநாயக்க, காலிங்க குமாரகே மற்றும் அருண தர்ஷன ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இவர்கள் மூவரும் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கின்றன.
சீனாவிலிருந்து நிரோஷான் பிரியங்கர