சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் பலரும் நேற்றைய (27) தினத்திலும் போட்டிகளில் பங்கேற்றபோதும் பதக்கத்தை நோக்கி முன்னேறும் அளவுக்கு அவர்கள் தமது திறமையை வெளிப்படுத்தத் தவறியுள்ளனர்.
இதில் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்ற நதில நெத்விரு தனது தனிப்பட்ட சிறந்த திறமையை வெளிப்படுத்தி இருந்தார். ஒட்டுமொத்த போட்டியிலும் அவர் 71.065 புள்ளிகளைப் பெற்றிருந்தார். எவ்வாறாயினும் போட்டியில் பங்கேற்ற 18 வீரர்களில் அவர் 17 ஆவது இடத்தையே பெற்றார்.
பெண்களுக்கான 100 மீற்றர் பக்ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் ஆரம்ப சுற்று போட்டியில் பங்கேற்ற கங்கா செனவிரத்ன 1:07.21 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து 6 ஆவது இடத்தையே பெற்றார். இந்தப் போட்டியில் தனது சிறந்த காலத்தை பெற தவறிய அவர் 27 வீராங்கனைகளில் 20 ஆவது இடத்தையே பெற்றார்.
செஸ் போட்டியில் நேற்று 8 ஆவது சுற்று போட்டியில் பங்கேற்ற சுசல் தெவ்ஜான் பிலிப்பைன்ஸ் வீரரிடம் தோல்வியை சந்தித்தார். தொடர்ந்து 9ஆவது சுற்றில் கிரிகிஸ்தான் வீரருடன் போட்டியிட்ட அவர் அந்தப் போட்டியில் வெற்றியை பதிவு செய்தார்.
பொக்சின் போட்டியின் 51 எடைப் பிரிவில் 32 வீரர்கள் பிரிவில் பங்கேற்ற ருக்மால் பிரசன்ன, பங்களாதேஷின் ஹொசைன் சலீமிடம் 2–3 என தோல்வியை சந்தித்தார். இந்தப் போட்டியில் கடைசி இரண்டு சுற்றுகளிலும் வெற்றிபெற ருக்மாலினால் முடிந்தபோதும் முதல் 3 சுற்றுகளிலும் வெற்றிபெற்ற பங்களாதேஷ் வீரர் வெற்றியை உறுதி செய்தார்.
இதன் 63 கிலோகிராம் எடைப் பிரிவில் நிராஜ் விஜேவர்தன இன்று (28) போட்டியிடவுள்ளார்.
இது தவிர நீச்சல் வீரர் மத்தியு அபேசிங் மற்றும் அகலங்க பீரிஸ் 50 மீற்றர் பட்டர்பிளை ஆரம்பச் சுற்று போட்டிகளில் பங்கேற்கவிருப்பதோடு, கொல்ப் மற்றும் ஈ ஸ்போர்ட்ஸ் போட்டிகளிலும் இலங்கை வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ஈ ஸ்போர்ட்ஸ் அணிக்கு சமுதித தர்மசிறி, மொஹமட் ரிஸ்வி, ரமேஷ் பெர்னாண்டோ மற்றும் மொஹமட் ரியாம் ஆகியோர் இடம்பெற்றிருப்பதோடு, டீ. தரங்கராஜா, மிதுன் பெரேரா, அநுர ரோஹன மற்றும் கே. பிரபாகர் இலங்கை கொல்ப் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் போட்டியை நடத்தும் சீனா 72 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துவதோடு தென் கொரியா 16 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் ஜப்பான் 13 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. கிரிக்கெட்டில் மாத்திரம் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றிருக்கும் இலங்கை 24 ஆவது இடத்தில் உள்ளது.
சீனாவிலிருந்து நிரோஷான் பிரியங்கர