இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இல்லாதவர்களுக்கு இருப்பவர்கள் உதவி செய்ய வேண்டும் என்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது. அத்தகைய உயரிய நோக்கத்தோடு வாழ்கின்ற இஸ்லாமிய பெருமக்கள் ‘மீலாதுந் நபி’ எனும் அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளை உலகம் எங்கும் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.
உலகம் செழிக்கவும், மானுடம் தழைக்கவும், சமுதாயத்தில் சாந்தியும், சமாதானமும், சகோதரத்துவமும் பெருக வேண்டும் என்பது அண்ணல் நபிகளின் அருட்போதனை ஆகும்.
நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று அவர்களின் போதனைப்படி, அன்பு பெருகவும், அமைதி நிலைக்கவும், சமரசம் உலவவும், சகோதரத்துவம் தழைக்கவும் அயராது உழைத்திட உறுதி ஏற்போம் எனக்கூறி, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய மீலாதுந் நபி’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.