அரசியலமைப்பின் பிரகாரம் புத்த சாசனத்தை பாதுகாக்க அரசாங்கம் கடமைப்பட்டிருப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய, வரலாறு தொடர்பில் ஆராயும் மாணவர்கள், கலாநிதி, பேராசிரியர்களுக்கான வசதிகளை வழங்கவும் இந்நாட்டின் வரலாறு தொடர்பிலான ஆய்வு மத்திய நிலையம் ஒன்றை உருவாக்குமாறும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய பௌதீக திட்டமிடற் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று (27) ஜனாதிபதி அலுவலத்தில் நடைபெற்ற பூஜாபூமி பத்திரங்களை வழங்கி வைப்பதற்கான நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது வரலாற்று சிறப்புமிக்க ஐந்து விகாரைகளுக்கு பூஜாபூமி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நாட்டுக்குள் மற்றைய மதங்களை அனுட்டிப்பதற்கு இடையூறு ஏற்படாத வகையில் மத ரீதியான மோதல்களை ஏற்படுத்த விளைவோரின் முயற்சிகளுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இருக்குமாறு மக்களை தெளிவுப்படுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதியின் செயலாளர் மகா சங்கத்தினரிடத்தில் வேண்டுகோள் விடுத்தார்.
வெல்கம ரஜமஹாவிகாரையின் பத்திரத்தை அம்பிட்டியே சீலவங்ச தேரருக்கும், மீகம்மான விகாரையின் பத்திரத்தை மானின்கமுவே விமலகீர்த்தி ஸ்ரீ சுமனஜோதி தேரருக்கும், கங்கொடவில விகாரையின்பத்திரத்தை கீர்த்தி ஸ்ரீ அமுனுள்ளே ஜினரத்ன தேரருக்கும், பெபிலியான சுனேத்திராதேவி பிரிவெனாவின் பத்திரத்தை வண. மெதகொட அபேதிஸ்ஸ தேரருக்கும் ஜனாதிபதியின் செயலாளர் வழங்கி வைத்தார்.
அதேபோல் மின்னேரிய மஹசென் விகாரையின் பத்திரத்தை மாதளே உடுகம சித்தானந்த தேரருக்கும், ருவன்வெல் மெதகொட சித்த சத் பத்தினி தேவாலயத்தின் பத்திரத்தை அதன் பொறுப்பாளர் கே.டபிள்யூ.எம். அஜித் சாந்தவுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் வழங்கி வைத்தார்.
தென் இலங்கையின் பிரதான சங்கநாயக்க தேரர் பௌத்த பாலி பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ஒத்ததெமலியே ஒந்தசார தேரர், ராமண்ய பீடத்தின் பதிவாளர் அத்தங்கனே சாசனரத்ன தேரர், அமரபுர நிகாயவின் முன்னாள் பதிவாளரும் ரஷ்யாவின் பிரதான சங்கநாயக்க தேரருமான பேராசிரியர் பல்லேகந்தே ரத்தனசார தேரர் ஆகியோருடன் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதான பதிரன, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்யானந்த உள்ளிட்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.