சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்றுவரும் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை ரக்பி அணி 10 ஆவது இடத்தையே பிடித்தது.
சர்வதேச தடையால் ஆசிய ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டியிட்ட இலங்கை ரக்பி அணி நேற்று (26) காலை 9 ஆவது இடத்திற்காக போட்டியிட்டு நேபாள அணியை 68–0 புள்ளிகளால் அபார வெற்றியை பெற்றபோதும் நேற்று மாலை நடந்த தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் 7–10 என தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் நேற்று பெண்களுக்கான 200 மீற்றர் பேக் ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் பங்கேற்ற இலங்கையின் கங்கா செனவிரத்ன 2:26.37 நிமிடங்களில் போட்டியை முடித்து ஐந்தாவது இடத்தையே பெற்றதோடு இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை. இது ஒட்டு மொத்த போட்டியாளர் எண்ணிக்கை 16 ஆவது இடமாக இருந்தது.
ஆண்களுக்கான 50 மீற்றர் பிரீ ஸ்டை போட்டியில் பங்கேற்ற மத்தியு அபேசிங்க 23.10 வினாடிகளில் போட்டியை முடித்து நான்காவது இடத்தையே பெற்றார்.
அதேபோன்று ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்ற நலீன் நெத்விரு அந்தப் போட்டியில் 18 பேரில் 17 ஆவது இடத்தையே பெற்றதோடு காற்றுப் படகோட்டப் போட்டியின் பெண்களுக்கான பிரிவில் பங்கேற்ற அரியானா தால்யா 5 ஆவது இடத்தையே பெற்றதோடு ஆண்களுக்கான பிரிவில் தரோ காஷ்ப 11 ஆவது இடத்தையே பெற்றார்.
செஸ் மற்றும் வுஷு போட்டிகளிவும் இலங்கை வீர, வீராங்கனைகள் சோபிக்கத் தவறினர்.
இந்நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கையின் மற்றொரு பதக்க எதிர்பார்ப்பாக உள்ள கிரிக்கெட் போட்டிகள் இன்று (27) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் நான்காவது நாள் நிறைவின்போது போட்டியை நடத்தும் சீனா முதலிடத்திலும் தென் கொரியா மற்றும் ஜப்பான் முறையே இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களிலும் உள்ளன. 9 ஆண்டுகளின் பின் வெள்ளிப் பதக்கம் ஒன்றை வென்றிருக்கும் இலங்கை 20 ஆவது இடத்தில் உள்ளது.
சீனாவிலிருந்து நிரோஷன் பிரியங்கர