கல்கிசை கடற்கரைப் பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி காயப்படுத்திய, ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்துள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் சார்ஜன்டும் சிகிச்சைக்கா களுபோவிலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிசை கடற்கரைப் பகுதியில் ஆபத்தான கடற் பகுதியில் மது அருந்திய நிலையில் சிலர் குளிப்பதாக, பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்தன.இதையடுத்து கல்கிசை
கடற்கரை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது குளிப்பதற்கு பொருத்தமில்லாத பாதுகாப்பற்ற கடற்பகுதியில் ஆறு பேர் குளித்துக் கொண்டிருந்தனர்.
இது, குளிப்பதற்கு பொருத்தமில்லாத ஆழமான பகுதியென தெரிவித்து அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அந்த அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதனை மறுத்த அவர்கள், மிகமோசமான வார்த்தைகளில் பொலிஸாரை திட்டி குழப்பகரமான சூழல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முனைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை அந்த 6 நபர்களும் தாக்கியுள்ளனர்.
இதன்போதே இவர்களை கைது செய்ததாகவும், அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 16 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்