தொடைப் பகுதியில் உபாதைக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை சுழற்பந்து சகலதுறை வீரர் வனிந்து ஹரங்கவின் காயம் தீவிரமாக உள்ள நிலையில் அவரை விரைவாக மைதானத்திற்கு திரும்பச் செய்ய மருத்துவர்கள் கடைசிக்கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் அவர் விரைவாக குணமடையும் வாய்ப்பு மிகக் குறைவாகவே உள்ளது என்று இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழு தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற லங்கா பிரிமியர் லீக் போட்டியின்போது தொடைப்பகுயில் உபாதைக்கு உள்ளான பின் 26 வயதான ஹசரங்கள் காயத்தில் இருந்து மீண்டு வரும் சிகிச்சையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் பயிற்சியில் ஈடுபட்டபோது அவர் உபாதைக்கு உள்ளான அதே தசைப் பகுதியில் பாதிப்பு உள்ளாகியுள்ளது. இது அவர் குறைந்தது நான்கு வாரங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.
“அவருக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறதா அல்லது இல்லையா என்பது பற்றி நாம் வெளிநாட்டு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று வருகிறோம். அவ்வாறு ஏற்பட்டால் அவர் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டி ஏற்படும். தற்போதைய சூழலில் நிலைமை அவ்வளவு மோசமில்லை என்றபோதும் அவர் உலகக் கிண்ணத்தில் பங்கேற்பது பெரும்பாலும் சாத்தியமில்லாமலேயே உள்ளது” என்று அர்ஜுன டி சில்வா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
“எமது பந்துவீச்சில் அவர் முக்கியமானவராக இருக்கும் நிலையில் குறைந்தது முக்கியமான போட்டிகளில் அவரை பயன்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகிறோம். நாம் அவரது மருத்துவ அறிக்கைகளை காண்பித்திருப்பவர்களின் ஆலோசனையிலேயே எல்லாம் தங்கியுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
உபாதைக்கு உள்ளாகி இருக்கும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர உலகக் கிண்ணத்தில் பங்கேற்காத சூழலில் ஹசரங்க இடம்பெறாதபட்சத்தில் அது இலங்கை அணிக்கு பெரும் இழப்பாக அமையும்.
“சமீர தற்போது பந்து வீசுகின்றபோதும் தொடந்தும் வலியை உணர்கிறார். அவருக்கு எவ்வாறு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பது என்பது பற்றி நாம் பிரிட்டனைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றோம்” என்று அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை அணி நாளை (26) இந்தியாவை நோக்கி பயணிக்கவுள்ளது. ஹசரங்க இலங்கை அணியில் இடம்பெற்றாலும் அவர் அணியுடன் நாளை பயணிக்க மாட்டார் என்று இலங்கை தேர்வுக் குழு தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஹசரங்க குழாத்தில் இருந்து வெளியேறும் பட்சத்தில் அணியுடன் பயணிக்கும் இரு மேலதிக வீரர்களான துஷான் ஹேமன்த மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகிய இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படவுள்ளார்.
ஹசரங்க சிம்பாப்வேயில் நடைபெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி வக்கார் யூனிசின் சாதனையையும் முறியடித்திருந்தார். இந்தத் தொடரில் அவர் 12.9 பந்துவீச்சு சராசரியுடன் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உபாதை காரணமாக ஆசிய கிண்ண தொடரில் இடம்பெறாத வேகப்பந்து வீச்சாளர்களான லஹிரு குமார மற்றும் டில்ஷான் மதுஷங்க முழு உடல் தகுதியை பெற்று உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெற்றிருப்பதோடு இவர்களுடன் கசுன் ராஜித்த மற்றும் மதீஷ பதிரணவும் வேகப்பந்து வரிசையில் உள்ளனர்.
ஆசிய கிண்ணத் தொடரின் இலங்கையின் கடைசி இரண்டு போட்டிகளிலும் கசுன் ராஜித்தவுக்கு பதில் சேர்க்கப்பட்ட பிரமோத் மதுஷான் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.
ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி சுப்பர் 4 போட்டியின்போது உபாதைக்கு உள்ளான சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன முழு உடல் தகுதியை காண்பித்த நிலையில் உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெற்றுள்ளார். அதேபோன்று இளம் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெள்ளாலகேயும் இலங்கை குழாத்தில் தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.
சில வீரர்கள் பற்றி கேள்விகள் இருந்தபோதும் ஆசிய கிண்ணத்தில் ஆடிய அதே துடுப்பாட்ட வரிசையை உலகக் கிண்ணத்திற்கும் தேர்வு செய்ய தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக அணித் தலைவர் தசுன் ஷானக்க துடுப்பாட்டத்தில் தொடந்து சோபிக்கத் தவறி வருவதோடு டெஸ்ட் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன திறமையை வெளிப்படுத்தாத நிலையின் ஆசிய கிண்ணத்தின் கடைசி இரு போட்டிகளிலும் நீக்கப்பட்டிருந்தார்.
இதன்படி இலங்கை குழாத்தில் அணியுடன் பயணிக்கும் இரு மேலதிக வீரர்களுடன் 17 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திமுத் கருணாரத்ன, குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகிய வீரர்கள் மாத்திரமே இதற்கு முன் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் ஆடிய அனுபவத்தை பெற்றவர்களாவர்.
நாளை இந்தியா செல்லும் இலங்கை அணி எதிர்வரும் வியாழக்கிழமை (28) பங்களாதேஷுக்கு எதிராகவும் தொடர்ந்து ஒக்டோபர் 3ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவும் பயிற்சி போட்டிகளில் ஆடவுள்ளது.
உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி தென்னாபிரிக்காவை டெல்லியில் சந்திக்கவுள்ளது.
இலங்கை அணி கடந்த வாரமே தேர்வு செய்யப்பட்டபோதும் நேற்று (24) பின்னேரம் வரையில் இலங்கை உத்தியோபூர் குழாம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்: தசுன் ஷானக்க (தலைவர்), பத்தும் நிசங்க, குசல் ஜனித் பெரேரா, திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துனித் வெள்ளாலகே, லஹிருகுமார, கசுன் ராஜித்த, மதீஷ பதிரண, டில்ஷான் மதுஷங்க, அணியுடன் செல்லும் மேலதிக வீரர்கள்: சாமிக்க கருணாரத்ன, துஷான் ஹேமன்த