உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் போன்றே கடந்த 2009ஆம் ஆண்டு சனல் -4 தொலைக்காட்சி வெளியிட்ட இசைப்பிரியா கொலை உள்ளிட்ட பல்வேறு காணொளிகள் தொடர்பாகவும் சர்வதேச விசாரணை அவசியமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நாட்டின் புலனாய்வுப்பிரிவு ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்றால் போன்று செயற்படுவதாலேயே, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணையை அனைவரும் கோர வேண்டியுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இதில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்னணி என்ன? ஏன் உண்மைகள் கண்டறியப்படவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இதேவேளை, ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் வவுணதீவில் நடந்த தாக்குதல் தொடர்பாக விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்பட்டது. ஆனால், அதனை உண்மையில் யார் செய்தனர் என்பதை அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டுமென்று பாராளுமன்றத்தில் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நாட்டின் ஆட்சியாளர்களுக்கு ஏற்றால் போன்று புலனாய்வாளர்கள் செயற்படுவதாலேயே சர்வதேச விசாரணையை கோர வேண்டியுள்ளது. அதனால் இந்த விடயம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்