Home » இனங்களுக்கிடையே ஐக்கியத்தை சீர்குலைக்கும் கைங்கரியங்கள்!

இனங்களுக்கிடையே ஐக்கியத்தை சீர்குலைக்கும் கைங்கரியங்கள்!

by gayan
September 23, 2023 6:00 am 0 comment

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை ஆயுதப் போராட்டத்தின் மூலம் வென்றெடுக்க முடியாதென்ற யதார்த்தம் முப்பது வருட கால யுத்தத்தின் இறுதியில் நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆயுதப் போராட்டத்தினால் மாத்திரமன்றி, அஹிம்சை வழியில் போராடுவதால் கூட தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாதென்பது வரலாற்றின் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டது.

அழுத்தங்களால் அன்றி இணக்கப்பாடு, விட்டுக்ெகாடுப்பு, புரிந்துணர்வு ஆகியவற்றின் ஊடாகவே தமிழினத்தின் உரிமைகளை வெற்றி கொள்ள முடியுமென்பதுதான் இதன் அர்த்தமாகும். ஆயுதப் போராட்டத்தை மீண்டும் மக்கள் மத்தியில் நினைவுகூர்வதனாலோ, அல்லது ஆயுதப் போராட்டத்தின் அக்கால வெற்றிகளை இன்னமும் பறைசாற்றிக் கொண்டிருப்பதனாலோ எதுவித பயனும் கிடையாதென்ற யதார்த்தம் தமிழ் மக்களுக்குப் புரிந்து விட்டது.

சிறுபான்மை இனமும் பெரும்பான்மை இனமும் விட்டுக்ெகாடுப்புடனும் முழுமையான புரிந்துணர்வுடனும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதன் மூலமே தமிழினத்தின் அரசியல் உரிமைக்கான அடித்தளத்தை உருவாக்க முடியும் என்பதே யதார்த்தம்.

இதனை விடுத்து ஏட்டிக்குப் போட்டியாக ஊர்வலங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வதனால் உரிய பலன் கிடைத்துவிடப் போவதில்லை. அதாவது ஒரு இனம் மற்றைய இனத்தை ஆக்ேராஷமூட்டும் விதத்தில் செயற்படுமானால் எமது நாட்டில் ஒருபோதுமே ஐக்கியம் உருவாகிவிடப் போவதில்லை. அதற்கு மாறாக இனங்களுக்கிடையே எக்காலமும் விரோதமே தொடர்ந்து கொண்டிருக்கும். இந்த யதார்த்தத்தை எவருமே மறந்துவிடக் கூடாது.

நாட்டில் சமீப காலமாக எதிரும்புதிருமான விதத்தில் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில்தான் இவ்வாறான எதிரும்புதிருமான சம்பவங்கள் இடம்பெற்று வருவதைக் காண முடிகின்றது. இவ்வாறான சம்பவங்கள் இனங்களுக்கிடையே விரிசலை மென்மேலும் அதிகரிக்கச் செய்து விடுமோ என்ற அச்சம் நாட்டில் ஐக்கியத்தை நேசிப்போர் மத்தியில் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

குருந்தூர்மலையில் சமீப காலமாக இடம்பெற்று வருகின்ற சம்பவங்கள் மற்றும் திருகோணமலை பிரதேசத்தில் இரு மதங்களைச் சேர்ந்த பிரிவினரிடையே உருவான முறுகல் போன்றவற்றை இதற்கான உதாரணங்களாகக் கொள்ள முடியும். அது மாத்திரமன்றி, திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேரணியில் இடம்பெற்றுள்ள சம்பவத்தையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.

முப்பது வருட காலமாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து பதினான்கு வருடங்கள் கடந்து விட்டன. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, புலிகள் இயக்கமும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டது. இலங்கையில் எதிர்காலத்தில் எந்தவொரு ஆயுதப்போராட்ட இயக்கமும் உருவாகுமென்ற நம்பிக்ைக முற்றாகவே இனிமேல் இல்லை. அவ்வாறு எந்தவொரு இனத்திலாவது ஆயுத இயக்கமொன்று உருவெடுக்குமானால், அதனை முற்றாகவே நசுக்குவதற்கு பாதுகாப்புப் படைகள் பின்வாங்கப் போவதில்லையென்பதையும் நாம் புரிந்து கொள்வது அவசியம்.

யதார்த்த நிலைமை இவ்வாறிருக்ைகயில், புலிகள் இயக்கத்தின் பெயரை வைத்துக் கொண்டு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் சுயநல அரசியல் நடத்தும் கைங்கரியத்தில் சில தரப்பினர் தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டேயிருக்கின்றனர். புலிகளின் பதாதைகளைத் தாங்கியவாறு மேற்குநாடுகளில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கென்று ஒரு தரப்பினர் தயாராகவே உள்ளனர். அதேபோன்று புலிகளின் அக்கால போராட்டங்களை இக்காலத்திலும் பெருமையுடன் நினைவு கூர்ந்து அரசியல் நடத்துவதற்கும் ஒரு பிரிவினர் எந்நேரமும் தயாராகவே உள்ளனர்.

இதற்கென்று சில இணையத்தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒழிக்கப்பட்டுப் போன புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் உள்ளதைப் போன்று அந்த இணையத்தளங்கள் போலியான செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. கற்பனை உலகில் சஞ்சரிப்பதைப் போன்று சில இணையத்தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வாசகர்களை அறிவிலிகள் என்றுதான் அந்த இணையத்தளங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றன.

நாட்டில் ஐக்கியம் தோன்றுவதை தமிழர்தரப்பில் ஒரு பிரிவினர் விரும்பவில்லை போலத் தென்படுகின்றது. எக்காலமும் முரண்பாடுகளையே முன்னிலைப்படுத்தி அவர்கள் நடவடிக்ைககளில் ஈடுபட்டு வருகின்றனர். சமாதான முயற்சிகள் ஆரம்பிக்கப்படுகின்ற வேளையில் முரண்பாடான கருத்துகளை வெளியிடும் காரியத்தில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக சமாதான முயற்சி ஆரம்பத்திலேயே கைகூடாமல் போகின்றது.

பல்லின மக்கள் வாழ்கின்ற எமது நாட்டில் இவ்வாறான முரண்பாட்டு அரசியலால் நன்மையெதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லையென்பதை சம்பந்தப்பட்டோர் புரிந்து கொள்வது அவசியமாகின்றது. அறிக்ைக அரசியலையும், ஆர்ப்பாட்டங்களையும் எக்காலமும் தொடர்ந்து கொண்டேயிருப்பது எந்தவொரு பயனையும் தந்துவிடப் போவதில்லையென்பதை நன்குணர்ந்து, ஒவ்வொருவரும் கருமமாற்ற வேண்டுமென்பதை வலிறுத்த விரும்புகிறோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT