பெரு நாட்டில் மலைப்பிரதேச வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டி பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அயோசோ நகரில் இருந்து ஜுனின் பிராந்திய தலைநகரான ஹுவான்காயோவுக்கு பயணித்துக்கொண்டிருந்த இந்த பஸ் வண்டி உள்ளூர் நேரப்படி கடந்த திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பஸ் வண்டி குறைந்தது 492 அடி பள்ளத்தில் விழுந்திருப்பதாக அங்கோ நகர மேயரான மனுவேல் செவலோஸ் பசகோ உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் மேலும் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெருவில் மலைப்பாங்கான வீதிகள் மற்றும் இரவு நேரங்களில் பஸ் வண்டிகள் விபத்துக்குள்ளாவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் பெருவில் வீதி விபத்துகளில் 3,300க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன.
தரமற்ற, போதிய பராமரிப்பற்ற வீதிகளும் இவ்வாறான விபத்துகளுக்கு காரணமாகியுள்ளது.