இலங்கையில் கடமையாற்றும் இராஜதந்திரிகள் அமைப்பின் தலைவரும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவருமான கலாநிதி ஸுஹைர் முஹம்மட் ஹம்தல்லாஹ் ஸைட்டும் சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானியும் நேற்று முன்தினம் (18ஆம் திகதி) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது சவூதி அரேபிய – பலஸ்தீன் நட்புறவு குறித்து இரு தூதுவர்களும் கருத்துப் பரிமாறலை மேற்கொண்டுள்ளனர்.
பலஸ்தீன விவகாரம் தொடர்பில் சவூதி அரேபிய நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டதோடு சவூதியின் நிலைப்பாடுகள் பலஸ்தீனுக்கு பிரகாசமானதாகவும் உறுதியானதாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சவூதி அரேபிய இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்ட காலம் முதல் இற்றை வரையும் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பலஸ்தீனுடன் நிற்பதாகக் குறிப்பிட்டுள்ள தூதுவர் ஹமூத் அல் கஹ்தானி, பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன்களுக்காக பல பில்லியன் அமெரிக்க டொலர்களை சவுதி வழங்கியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பலஸ்தீன மக்களுக்காக ஆயிரக்கணக்கான வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ள சவூதி அரேபியா, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக மனிதாபிமான உதவி ஒத்துழைப்புக்களையும் நல்கி வருகின்றது. அத்தோடு ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வருடா வருடம் இலவசமாக ஹஜ் கடமையை நிறைவேற்றவும் வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாகவும் தூதுவர் ஹமூத் அல் கஹ்தானி தெரிவித்துள்ளார்.
பலஸ்தீனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக மறைந்த முன்னாள் மன்னர் ஃபஹ்த்தின் அமைதித் திட்டம், முன்னாள் மன்னர் அப்துல்லாஹ்வின் முன்முயற்சி, ஹமாஸ் – ஃபத்தா அமைப்புகளுக்கு இடையிலான மக்கா ஒப்பந்தம், தற்போதைய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸின் சமாதான முயற்சிகள் உட்பட பல விடயங்கள் குறித்தும் இருவரும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடியுள்ளனர்.
மர்லின் மரிக்கார்