அக்கரைப்பற்று பிரீஸியா (FREESIA) அமைப்பு ஏற்பாடு செய்த ‘வளமான எதிர்காலத்தை நோக்கிய வரங்களை வரவேற்போம்’ என்ற நிகழ்வு அக்கரைப்பற்று ஹல்லாஜ் மண்டபத்தில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி யூ.எல்.செய்னுடீன் தலைமையில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மற்றும் அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகாவித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஆகிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த புதிய அதிபர்களான ஏ.எச்.பெளஸ் மற்றும் ஏ.ஜீ.பஸ்மீல் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லா கலந்து கொண்டார்.
அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்களாக இருந்த இவ்விருவரும் மேற்கொண்டு வருகின்ற சமூகப்பணிகள் குறித்து இங்கு பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
கௌரவிக்கப்பட்ட அதிபர்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னங்கள் வழங்கி வழங்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஓய்வநிலை அதிபர்கள், பிரீஸியா அமைப்பின் அங்கத்தவர்கள், கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
எம்.எஸ்.எம்.றிஸ்வான்…
(அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்)